அப்ரிடி பிடித்த அபார கேட்ச்: குவியும் பாராட்டுக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
அப்ரிடி பிடித்த அபார கேட்ச்: குவியும் பாராட்டுக்கள்

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, லீக் போட்டி ஒன்றில் பிடித்த கேட்ச்சின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி. ஆல்ரவுண்டரான இவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தற்போது பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில், பாகிஸ்தான் பிரிமியர் லீக் போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகின்றன. இதில், கராச்சி அணிக்காக அப்ரிடி விளையாடி வருகிறார்.
 
நேற்று நடந்த போட்டியில், கராச்சி கிங்ஸ் அணியும், குவட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. குவாட்டா அணி துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அந்த அணி வீரர் உமர் அமின் தான் எதிர்கொண்ட பந்தை சிக்ஸருக்கு விளாசினார்.
 
ஆனால், எல்லைக் கோட்டில் நின்றிருந்த அப்ரிடி, அந்த பந்தை ஒற்றைக் கையில் பிடித்தார். எனினும், அவரது கால் இடறியதால் பந்தை மேலே வீசிய அவர், எல்லைக் கோட்டிற்குள் மீண்டும் வந்து அதனைப் பிடித்தார்.
 
அவர் பிடித்த இந்த கேட்ச், பலத்த பாராட்டை பெற்றது. வர்ணனையாளர்களும், அப்ரிடிக்கு 38 வயதில்லை, 32 தான் ஆகிறது என புகழ்ந்தனர்.
 
மேலும், சமூக வலைதளங்களிலும் இந்த வயதிலும், இளைஞனைப் போல அவர் கேட்ச் பிடித்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 
பாகிஸ்தான் அணிக்காக 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரிடி, 8064 ஓட்டங்கள் குவித்ததுடன், 395 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை