பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை

தினமலர்  தினமலர்
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை

சென்னை: சென்னைக்கு இன்று(பிப்.,24) வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக அரசின், 'அம்மா ஸ்கூட்டர்' திட்டத்தை துவக்கி வைப்பதுடன், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேச உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து, இன்று மாலை, 5:20க்கு, சென்னை வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில், 'ஐ.என்.எஸ்., அடையாறு' ஹெலிகாப்டர் தளம் செல்கிறார். அங்கிருந்து மாலை, 5:50க்கு, காரில் புறப்பட்டு, கலைவாணர் அரங்கம் செல்கிறார். அங்கு, பணிபுரியும் மகளிருக்கு, இரு சக்கர வாகனங்கள் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும், 'அம்மா ஸ்கூட்டர்' திட்டத்தை, துவக்கி வைக்கிறார். ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு, இத்திட்டம் துவங்கப்படுகிறது. இதற்காக, 1,000 இரு சக்கர வாகனங்கள், கலைவாணர் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

விழாவில், முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி முடிந்து, மாலை, 6:35க்கு, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு பிரதமர் செல்கிறார். இரவில் அங்கு தங்கும் பிரதமர், முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். முதல்வர், துணை முதல்வரும் சந்தித்து பேச, நேரம் கேட்டுள்ளனர்.

பிரதமரின் வருகையை ஒட்டி, சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும், கலைவாணர் அரங்கம் அமைந்துள்ள சாலையில், நடைபாதை கடைகள் நேற்றே அகற்றப்பட்டன. அப்பகுதி முழுவதையும், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இரவு, கவர்னர் மாளிகையில், பிரதமர் தங்குவதால், அப்பகுதியை சுற்றியும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரை வரவேற்று, உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி சார்பில், விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்றும், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை