தங்கவயலில் டிஜிட்டல் பேனர் வைக்க நிரந்தர தடை விதிக்கப்படுமா? இன்று நடக்கும் விசாரணையில் தெரியும்

தினகரன்  தினகரன்

தங்கவயல்: தங்கவயல் நகரின் அழகை சீர்கெடுத்து வரும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரத்தி–்ற்கு நிரந்தரமாக தடை விதிக்ககோரி பங்காருபேட்டை தாலுகா சட்ட சேவை மையத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. அதில் பேனர் வைக்க நிரந்தர தடை விதி்க்கும் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. தங்கவயல் நகரில் சமீப ஆண்டுகளாக சிறிய விழாக்கள் தொடங்கி பெரிய விழாக்கள், திருமணம், நிச்சயத்தார்த்தம், காதணி, மஞ்சள் நீராட்டு, நினைவேந்தல், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள்  உள்பட பல நிகழ்வுகளை விளம்பரப்படுத்தும் டிஜிட்டல் பேனர் வைக்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்தி சதுக்கம், சூராஜ்மல் சர்க்கிள், பிரிச்சர்ட் சாலை சந்திப்பு, நகரசபை மைதானம், உரிகம் ரயில் நிலையம், ஐந்து விளக்கு சதுக்கம், ஸ்கூல் ஆப் மைன்ஸ் சர்க்கிள், விவேக் நகர், சுவர்ணாநகர், ஆண்டர்சன்பேட்டை, மாரிகுப்பம் உள்பட பல பகுதிகளில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பேனர்கள் காட்சி தருகிறது. குறிப்பாக மகாத்மாகாந்தி சிலையை சுற்றி இறந்து போனவர்களின் விளம்பரம் அதிகம் வைக்கப்படுவதால், நகரின் அழகுக்கு சீர்குலையும் வகையில் உள்ளது.இந்நிலையில் தங்கவயல் நகரின் அழகை சீர்கெடுக்கும் வகையில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கவும், விளம்பர பேனர்கள் வைக்க நகரசபை தனியாக இடம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என  உத்தரவிடக்கோரியும் தங்கவயல் உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் பங்காருபேட்டை தாலுகா சட்ட சேவை மைய தலைவரும், நீதிபதியுமான சி.என்.லோகேஷிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள சட்ட சேவை மையம் இது தொடர்பாக நகரசபைக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதை தொடர்ந்து புதியதாக யாரும் டிஜிட்டல் பேனர் வைக்க நகரசபை கமிஷனர் அனுமதி வழங்காமல் தற்காலிகமாக தடை போட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான விசாரணை இன்று பகல் 3 மணி்க்கு நீதிபதி சி.என்.லோகேஷ் முன் நடக்கிறது. இதில் ஆஜராகும்படி தங்கவயல் போலீஸ் மாவட்ட சூப்பிரண்டு , துணை போலீஸ் சூப்பிரண்டு, உரிகம், ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை, மாரிகுப்பம் ஆகிய போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள், அனைத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள், தங்கவயல் நகரசபை கமிஷனர் மற்றும் மனுதாரரான உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இன்று நடக்கும் விசாரணையில் தங்கவயல் நகரின் முக்கிய இடங்களில் டிஜிட்டல் பேனர் வைக்க நிரந்தர தடை விதிக்கப்படுமா? என்பது தெரியவரும். பெரும்பான்மையான மக்களின் கருத்து பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என்பதாகும். மக்களின் விருப்பத்தை சட்ட சேவை மையம் தீர்த்து வைக்குமா? என்பது இன்று தெரியவரும்.

மூலக்கதை