சட்டப்பேரவை தேர்தலில் பாஜ ஆட்சியை பிடிக்கும்: ஜனார்தனரெட்டி நம்பிக்கை

தினகரன்  தினகரன்

தங்கவயல்: மாநில சட்டப்பேரவைக்கு நடக்கும் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜ ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜனார்தனரெட்டி நம்பிக்கை தெரிவித்தார். தங்கவயலில் பிரசித்தி பெற்ற பிரசன்ன லட்சுமி வெங்கடரமணசாமி கோயில் பிரமோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் ரெட்டி  அறக்கட்டளை சார்பில் ஷிபிக வாகனோற்சவம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெங்கடரமணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி சாமி தரிசனம் பெற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வாழ்க்கையில் பல ஏற்ற-தாழ்வுகளை சந்தித்து தான் நான் தொழிலிலும், அரசியலிலும் வளர்ந்தேன். எனது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் கொடுத்த பொய் புகார் காரணமாக 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தேன். திருப்பதி ஏழுமலையான் அருளால் தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறேன். என்மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் கண்டிப்பாக நான் நிரபராதியாக விடுதலையாவேன். என்மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், பல்லாரி மாவட்டத்திற்கு செல்ல உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆகவே வரும் தேர்தலில் நான் பல்லாரி மாவட்டத்திற்கு செல்லாமல் பிற மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ வேட்பாளர்களின் வெற்றிக்காக பிரசாரம் செய்வேன். வரும் தேர்தலில் பாஜ பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. மக்கள், காங்கிரஸ் கட்சியை முழுமையாக வெறுத்து விட்டனர். மக்களுக்கு பாஜவால் மட்டுமே நிலையான, நிம்மதியான ஆட்சியை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இது வாக்குகளாக மாறி ஆட்சி அமைய உதவும். பல்லாரி மாவட்டத்தில் எனது செல்வாக்கி–்ல் எம்.எல்.ஏவாக தேர்வான ஆனந்த்சிங், நாகேந்திரா ஆகியோர் பாஜவுக்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்துள்ளனர். அவர்கள் விலகியுள்ளதால், பாஜவுக்கு எந்த பாதிப்புமில்லை என்றார்.

மூலக்கதை