தலைமை செயலாளரை தாக்கிய விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் சோதனை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: டெல்லி தலைமை செயலாளர் தாக்கப்பட்ட புகாரின் பேரில், முதல்வர் ெகஜ்ரிவாலின் வீட்டில் 60க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த திங்களன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைமை செயலாளர் அன்சு பிரகாஷ் கலந்து கொண்டார். அப்போது, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களால் தான் தாக்கப்பட்டதாக  சிவில் லைன் போலீசில் அவர் புகார் அளித்தார். இதன் பேரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜர்வால், அமானத்துல்லா கான் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் வீட்டுக்குள் ேநற்று 60க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென நுழைந்து சோதனை செய்தனர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த 21 சிசிடிவி கேமராக்களை பறிமுதல் செய்தனர். இது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி கூடுதல் துணை காவல் ஆணையர் (வடக்கு) ஹரேந்திர சிங் கூறுகையில், ‘‘சோதனை குறித்து முதல்வர் இல்ல பராமரிப்பு அதிகாரிக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தோம்.  தலைமை செயலாளர் தாக்கப்பட்டதாக கூறப்படும் அறையில் சிசிடிவி கேமரா இல்லை. இச்சம்பவம் 19ம் தேதி இரவு 12.15 மணிக்கு நடந்திருக்கக் கூடும். அன்றைய தினம் பதிவான சிசிடிவி காட்சிகளை தருமாறு கடந்த 20ம் தேதியே கேட்டோம். அவர்கள் தர மறுத்ததால், சாட்சியங்களை சேகரிக்க போலீசார் அனுப்பப்பட்டனர்’’ என்றார். கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எனது இல்லத்துக்கு அதிகளவில் போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். முழு இல்லத்தையும் அவர்கள் சோதனை செய்து வருகின்றனர். நீதிபதி லோயா மரண வழக்கில் அமித் ஷாவிடம் எப்போது விசாரணை நடத்தப்படும்? இதே அவசரத்தை அங்கு போலீசார் காட்டுவார்களா?’ என கூறியுள்ளார்.

மூலக்கதை