டெல்லியில் திடீர் முற்றுகை போராட்டம் விவசாயிகளை கலைக்க துப்பாக்கிச்சூடு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்திய தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளை போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைத்தனர். விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தியது. இதில், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் 69 விவசாய சங்கங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தில் இருந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு சார்பாக 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். டெல்லி நகரத்துக்கு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளான பரிதாபாத், டெல்லி மற்றும் நிஜாமுதீன் ஆகியவற்றின் வெளிப்பகுதிகளில் விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், இதற்கு அவர்கள் உடன்படாததால் இருதரப்புக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் துப்பாக்–்கியால் வானத்தை நோக்கி சுட்டு அவர்களை எச்சரித்தனர். இதனால், துப்பாக்கிச்சூடுக்கு பயந்து விவசாயிகள் சிதறி ஓடினர். போலீசார் அவர்களை கைது செய்து பரிதாபாத் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர், மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

மூலக்கதை