முதலீட்டாளர் மாநாட்டிற்காக உ.பி.யை அழகுபடுத்த ரூ.66 கோடி

தினகரன்  தினகரன்

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டுக்காக  மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 2 நாட்கள் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நேற்று முடிந்தது. இந்த மாநாட்டில் 10 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும், 110 நிறுவனங்களும் இதில் கலந்து கொண்டன. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இந்த மாநாட்டுக்காக உபியை அழகுப்படுத்துவதற்காக ரூ.66.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டுக்காக 22 விமானங்கள் இயக்கப்பட்டன. 12 ஆடம்பர ஓட்டல்களில் 300 அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்தது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் ரூ.4.28 லட்சம் கோடி மதிப்புள்ள 1,045 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம், 33 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.‘மக்கள் பணத்தை தண்ணீர் மாதிரி செலவழிக்கிறீங்களே’பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அளித்த பேட்டியில், “மக்கள் கஷ்டப்பட்ட பணத்தை தண்ணீர் போன்று செலவழிப்பதற்காக முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவது என்பது பாஜ அரசின் பேஷனாகும். பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இது போன்ற மாநாட்டினை பாஜ அரசு நடத்துகிறது. போலீஸ் என்கவுன்டர்களால் மட்டுமே சட்டம் ஒழுங்கை மேம்படுத்த முடியாது. மக்களால் உருவாக்கப்பட்–்ட ஜங்கிள் ராஜ், மாபியா ராஜ் ஆகியவற்றை ஒடுக்க, அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது இருக்கும் கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறுகிறது. அரசின் இந்த கொள்கை, சட்டம், ஒழுங்கை மேலும் பாதிக்கும்” என்றார்.

மூலக்கதை