நீட் தேர்வுக்கு வயது கட்டுப்பாடு சிபிஎஸ்இ மீது மாணவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : நீட் தேர்வுக்கு வயது கட்டுப்பாடு விதித்து சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே 6ம் தேதி நடக்கிறது. இதற்காக, கடந்த 8ம் தேதி முதல் வரும் மார்ச் 9ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்தது. மேலும், ‘ஏப்ரல் 3வது வாரத்தில் இருந்து நீட் தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 31.12.2017ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ 17 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சமாக வயது வரம்பு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினர் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்’ எனவும் அதில் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், வயது கட்டுப்பாடு விதித்துள்ள சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு எதிராக பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க நினைக்கும் அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக நீட் தேர்வை எழுத வேண்டும். இதில், சிபிஎஸ்இ நிர்வாகம் செய்துள்ள இடஒதுக்கீடு, வயது கட்டுப்பாடு என்பது நிர்ணயம் செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே, மாணவர்களின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என தெரிவித்தனர்.

மூலக்கதை