லோக்பால் அமைக்க மார்ச் 1ல் பிரதமர் தலைமையில் கூட்டம் : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : லோக்பால் அமைக்க பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 1ல் கூட்டம் நடக்க இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்பால் அமைப்பை விரைந்து அமைக்க மத்திய  அரசுக்கு உத்தரவிடக் கோரி, அரசு சாரா தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, ‘லோக்பால் உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் இடம் பெற வேண்டும் என அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில், மக்களவையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு, 45 எம்.பி.,க்களே உள்ளதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக உள்ளது. இதனால், லோக்பால் அமைப்பிற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல் உள்ளது’ என்று மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்ஜன் கோகோய், பானுமதி அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘லோக்பால், லோக் ஆயுக்தா சட்ட வடிவம் பெற்றும் அந்த அமைப்புகள் இயங்காமல் உள்ளன. இதை ஏற்க முடியாது. லோக்பாலுக்கு இதுவரை உறுப்பினர்களை நியமிக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறுகையில், ‘‘லோக்பால் அமைப்பை உருவாக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மார்ச் 1ல் பிரதமர் மோடி தலைமையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மக்களவையில் அதிக உறுப்பினர்கள் கொண்ட எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அவர்கள் லோக்பால் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள்’’ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். மார்ச் 5ல் மத்திய அரசின் பணியாளர் நலத்துறை இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.லோக்பால் பயன் என்ன?லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்காக மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு என்று உருவாக்கப்படும். இதில் ஒரு தலைவர் மற்றும் அதிகபட்சமாக 8 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். இதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறை சார்ந்தவர்கள். லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிராக இருக்கவேண்டும். லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர் உள்பட அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.

மூலக்கதை