ஏர் இந்தியா விமானங்களில் திருநங்கைக்கு பணிப்பெண் வேலை வழங்கியது இல்லை : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : ‘விமான பனிப்பெண் வேலையில் இதுவரை திருநங்கைகளை சேர்த்தது இல்லை’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் திருநங்கை ஷானவி பொன்னுசாமி. பொறியியல் பட்டதாரியான இவர், குடும்பத்தை விட்டு பிரிந்து மும்பை சென்றார். அங்கு மாடலிங், நடிப்பு என துறைகளில் ஈடுபட்டார். பின்னர், ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண் வேலைக்காக விண்ணப்பித்தார். ஆனால், திருநங்கை என்பதால் அவருக்கு வேலை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்தாண்டு ஏர் இந்தியா நிறுவனம் மீது உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ஏர் இந்தியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இந்த இரண்டுமே இதுவரை நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷானவி தரப்பில் மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அனைத்து தகுதிகள் இருந்தும் ஏர் இந்தியா விமான நிறுவனம் என்னை மூன்றாம் பாலினம் என்பதை சுட்டிக்காட்டி பணி வழங்க மறுத்து வருகிறது’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ‘‘விமானப்பணியை பொருத்தவரையில் ஆண், பெண் இரு பாலினத்தை மட்டும்தான் வேலைக்கு எடுத்து வருகிறோம். இதில், இதுவரை மூன்றாம் பாலினமான திருநங்கைகளுக்கு வேலை வழங்கியது கிடையாது’’ என தெரிவித்தார். பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த மனுவை நீதிமன்றம் ஏற்கிறது. இந்த மனு மீது ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை