வங்கி நிதி மோசடி எதிரொலி : கோர் பேங்கிங் சிஸ்டத்துடன், ஸ்விஃப்டை இணைக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்

மும்பை : அனைத்து வங்கிகளும் தங்களது கோர் பேங்கிங் சிஸ்டத்துடன், ஸ்விஃப்ட் எனப்படும் சர்வதேச அளவிலான நிதிச்சேவைத் தகவல் பரிமாற்ற கட்டமைப்பை இணைக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடியின் எதிரொலியாக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்களால் அளிக்கப்பட்ட போலி உறுதியேற்பு கடிதத்தின் அடிப்படையில் வெளிநாட்டில் உள்ள  அலகாபாத் வங்கி, ஆக்சிஸ் வங்கி கிளைகளில் நீரவ் மோடி கடன் பெற்றுள்ளனர். இந்த கடனை பெறுவதற்கான ரகசிய குறியீட்டு தகவல் பரிமாற்றம் ஸ்விஃப்ட் சேவை கட்டமைப்பு மூலம் நடைபெற்றுள்ளது.சம்மந்தப்பட்ட வங்கிகளில் கோர் பேங்கிங் சிஸ்டத்துடன் ஸ்விஃப்ட் நிதிச்சேவைக் கட்டமைப்பு இணைக்கப்படாததால் இப்படி ஒரு மோசடி நடைபெற்றதே சம்மந்தப்பட்ட வங்கிக்கு தெரியவில்லை. எனவே ஸ்விஃப்ட் சேவைக் கட்டமைப்பை வங்கிகளின் கோர் பேங்கிங் சிஸ்டத்துடன் இணைக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கடிதம் அனுப்பியுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து வங்கிகளும் இதனைச் செய்து முடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கெடு விதித்துள்ளது.

மூலக்கதை