பாக்கெட் பொருட்களில் விபரம் இருக்கா? அரசு கிடுக்கிப்பிடி

தினமலர்  தினமலர்
பாக்கெட் பொருட்களில் விபரம் இருக்கா? அரசு கிடுக்கிப்பிடி

சென்னை : பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருட்களில், தேவையான விபரங்கள் உள்ளதா என, மாதந்தோறும் ஆய்வு செய்ய, தொழிலாளர் நலத்துறை முடிவு செய்து உள்ளது.

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருட்கள் மீது, தயாரிப்பவர், பொட்டலமிடுபவர் பெயர், முழு முகவரி, நுகர்வோர் பாதுகாப்பு எண், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மாதம் மற்றும் ஆண்டு, அனைத்து வரிகள் உட்பட, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.

கட்டாயம்:

இது, 2011 சட்டமுறை எடையளவு, பொட்டல பொருட்கள் விதிகளின்படி, கட்டாயமாக்கப் பட்டுள்ளது. பாக்கெட்டில், குறிப்பிடப்பட்ட விலையை விட, வியாபாரிகள் கூடுதல் விலையில் விற்கக்கூடாது. சமீப காலமாக, பாக்கெட் பொருட்களில், தேவையான விபரங்கள் இல்லை எனவும், கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனால், தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலர், பாலச்சந்திரன் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்து, 83 இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. பல்பொருள் அங்காடிகளில், 179 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அபராத தொகை வசூலிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடிவு நுகர்வோர் நலன் காக்கும் வகையில், தமிழகம் முழுவதும், மாதந் தோறும், முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில் தொடர்ந்து ஆய்வு நடத்த, தொழிலாளர் நலத்துறை முடிவு செய்து உள்ளது.

மூலக்கதை