இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வர குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

தினகரன்  தினகரன்

செர்கதாபாத் : துர்க்மென்சிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வருவதற்காக குழாய் பதிக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான் எண்ணெய் வளம் மிக்க நாடாகும். இங்குள்ள கால்கினைஸ் எரிவாயு வயலில் இருந்து தெற்காசிய நாடுகளில் நிலவும் எரிவாயு பற்றாக்குறையை போக்க ‘டாபி’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. துர்க்மெனிஸ்தான், ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் முதல் எழுத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, குழாய் மூலம் எரிவாயுவை கொண்டு செல்வதற்கான குழாய் பதிக்கும் பணி  நேற்று தொடங்கியது. இதற்காக 1,840 கிமீ தொலைவுக்கு குழாய் பதிக்கப்பட்டு ஆப்கான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வரப்படுகிறது. பணி நிறைவடைந்த பின் வரும் 2020ல் எரிவாயு கொண்டு செல்லும் பணி தொடங்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 33 பில்லியன் கன மீட்டர் எரிவாயு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும். இந்த பணியின் தொடக்க விழா துர்க்மெனிஸ்தானில் நேற்று நடைபெற்றது. ஆப்கான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் உள்ள செர்கதாபாத்தில் நடைபெற்ற விழாவில் ஆப்கான் அதிபர் அஸ்ரப் கனி, துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலி பெர்டிமுகம்தேவ், பாகிஸ்தான் பிரதமர் சாதிக் கான் அப்பாசி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்ஜே அக்பர் ஆகியோர் பங்கேற்றனர்.

மூலக்கதை