இந்திய ஐடி துறையை கடுமையாக பாதிக்கும் எச்1 பி விசா விதிமுறை புதிய கட்டுப்பாடு அமல்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன் : எச்1 பி விசா நடைமுறையை அமெரிக்க அரசு மேலும் கடுமையாக்கி இருக்கிறது. இதனால், இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். குறிப்பாக, எச்1 பி விசா நடைமுறையை டிரம்ப் கடுமையாக்கி வருகிறார். இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில் எச்1 பி விசாவை வழங்குவதற்கான நடைமுறை ஏப்ரல் 2ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த விசா நடைமுறையை மேலும் கடுமையாக்குவதற்கான புதிய விதிமுறையை டிரம்ப் அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன்படி, வெளிநாட்டு ஐடி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள், அமெரிக்காவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 3ம் நபர் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்நிறுனங்களில் செய்யப்பட வேண்டிய பணிகளையும், அதற்கு தகுதியான அமெரிக்க ஊழியர்கள் இல்லாத பட்சத்தில் இவர்கள் அழைத்து வரப்படுவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் நிரூபிக்க வேண்டும் என்பது முக்கியமானது. எச்1 பி விசாவால் இந்தியா உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்த ஐடி நிறுவனங்கள்தான் அதிகளவில் பலன் அடைகின்றன. தற்போது, எச்1 பி விசா மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டு வருகிறது.  புதிய சட்டத்தின் மூலம், விசா காலம் மூன்று ஆண்டுகளுக்கும் கீழாக குறைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை