அரசியலுக்கு கட்டமைப்பு முக்கியம், அடித்தளத்தை வலுவாக்க வேண்டும் : ரஜினி

தினமலர்  தினமலர்
அரசியலுக்கு கட்டமைப்பு முக்கியம், அடித்தளத்தை வலுவாக்க வேண்டும் : ரஜினி

நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்தில் இறங்கிவிட்டார். கட்சி பெயரையும் அறிவித்துவிட்டார். கமலுக்கு முன்பாகவே அரசியல் பயணத்தை அறிவித்தவர் ரஜினி. ஆனால் இன்னும் இறங்கவில்லை. மாறாக தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வருகிறார். மாவட்டம் வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்திற்கான நிர்வாகிகள் நிர்வகிக்கப்பட்டனர். இதற்கான நிகழ்வு சென்னை, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது ரசிகர்கள் மத்தியில் ரஜினி தோன்றி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், ரசிகர்கள் எல்லோரையும் ஒரே நேத்தில் சந்திக்க முடியாது. அதற்கு சில நாட்களாகும். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் நம் வேலையை அமைதியாக கவனிப்போம்.

உங்களுக்கு யாரும் அரசியல் பாடம் கற்று தர தேவையில்லை, நீங்கள் தான் பிறருக்கு கற்று கொடுப்பீர்கள். ஒரு குடும்பத்தை நடத்த குடும்பத்தலைவன் சரியாக இருக்க வேண்டும். இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக உள்ளேன்.

அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள்வது அவசியம். இது சாதாரண கட்டடம் கிடையாது. 32 அடுக்குமாடி(32 மாவட்டம்) கொண்டது. ஆகையால் அடித்தளத்தை வலுவாக அமைக்க வேண்டும்.

காலா படத்தின் கதை நெல்லையோடு தொடர்புடையது. விரைவில் ரசிகர்கள் எல்லோரையும் சந்திக்கிறேன் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, அனைத்து மாவட்டத்திற்கா பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் எனது பொதுக்கூட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன். காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டதை வரவேற்கிறேன்.

கமலின் பொதுக்கூட்டம் சிறப்பாக இருந்தது நானும் பார்த்தேன். அவர் மிகவும் திறமைசாலி, அவர், தன் பயணத்தை சிறப்பாக செய்வார். நானும், கமலும் ஒவ்வொரு பாதையில் சென்றாலும் போய் சேரும் இடம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான். அது நிச்சயம் நடக்கும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

மூலக்கதை