நைஜீரியாவில் கல்லூரி மாணவிகளை கடத்திய போகோ தீவிரவாதிகள்- தாக்குதல் நடத்தி அதிரடியாக மீட்ட ராணுவம்

தினகரன்  தினகரன்

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்திய 76 கல்லூரி மாணவிகளை அந்நாட்டு ராணுவத்தினர் அதிரடியாக மீட்டுள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஒருபகுதியில் உள்ள அரசு மகளிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று முன்தினம் இந்த கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீவிரவாதிகள் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து மாணவிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். பிறகு 91 மாணவிகளை தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனால் அச்சமடைந்த மாணவியர்களின் பெற்றோர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். வனப்பகுதியை ஒட்டியிருந்த ஒரு கிராமத்தில் கல்லூரி மாணவிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி 76 கல்லூரி மாணவிகளை நைஜீரிய ராணுவத்தினர் மீட்டனர். அப்போது நடைபெற்ற மோதலில் 2 மாணவிகள் உயிரிழந்துவிட்டதாகவும், 11 பேரை காணவில்லை எனவும் ராணுவ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிக்புக் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு கடத்தப்பட்ட 200 மாணவிகளில் 100 பேர் மீட்கப்பட்டனர். மேலும், 100 பேரை தேடும் பணியில் ராணுவம் இன்னும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை