'பெயரையும் பறியுங்கள்': நவாஸ் ஆவேசம்

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்: ''முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பதவியில் இருந்து என்னை தகுதி நீக்கம் செய்தது, அரசியலில் இருந்தே என்னை விரட்டும் முயற்சி. தேவைப்பட்டால், என் பெயரையும் பறித்துக் கொள்ளுங்கள்,'' என பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டி உள்ளார்.பாக்., பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கியதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆளும் கட்சியான முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக, நவாஸ் ஷெரீப் தொடர்ந்து வந்தார். இதை எதிர்த்து, பாக்., உச்ச நீதிமன்றத்தில், அவாமி முஸ்லிம் லீக் உட்பட, பல கட்சிகள் மனு தாக்கல் செய்தன.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அரசியல் சட்டத்தில், 62 மற்றும், 63வது பிரிவின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், அரசியல் கட்சியின் தலைவராக பதவி வகிக்க கூடாது' என, தீர்ப்பளித்தது.இந்நிலையில், பனாமா பேர்பர்ஸ் ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக, நவாஸ் ஷெரீப், நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்; அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இது, எதிர்பார்த்த முடிவு தான். முதலில் என்னிடம் இருந்து பிரதமர் பதவியை பறித்தனர். தற்போது, கட்சித் தலைவர் பதவியையும் பறித்துள்ளனர். என் பெயர் முகமது நவாஸ் ஷெரீப். இந்த பெயரை என்னிடம் இருந்து பறிக்க வேண்டும் என நினைத்தால், அதையும் பறியுங்கள்; இந்த தீர்ப்பு, கோபத்திலும், பழிவாங்கும் நோக்கத்திலுமே வழங்கப்பட்டுள்ளது. அரசியலில் இருந்தே, என்னை விரட்டும் முயற்சி இது, என்றார்.

மூலக்கதை