லாகூர் ரவுண்டானாவுக்கு பகத்சிங் பெயர் வைக்கணும்

தினமலர்  தினமலர்

லாகூர்: சுதந்திரப் போராட்ட வீரர், பகத் சிங் தூக்கிலிடப்பட்ட இடமான, லாகூரில் உள்ள ஷாத்மான் சவுக் என்ற ரவுண்டானாவுக்கு, அவரது பெயரை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய, பகத்சிங், அவரது நண்பர்கள் ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர், 1931, மார்ச், 23ல், அப்போது பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அந்த இடம், தற்போது ஷாத்மான் சவுக் என்ற ரவுண்டானாவாக உள்ளது.இந்த ரவுண்டானாவுக்கு, தியாகி பகத்சிங்கின் பெயரை வைக்கக் கோரி, பகத்சிங் நினைவு அறக்கட்டளை தலைவர் இம்தியாஸ் ரஷீத் குரேஷி, லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மனுவில் அவர் கூறியுள்ளதாவது:ஷாத்மான் சவுக்குக்கு பகத் சிங்கின் பெயரை வைக்கக் கோரி அரசுக்கு மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்தியாவிலும், பல தெருக்கள், பகுதிகளுக்கு முஸ்லிம்கள் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. தபால் தலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.ஒருங்கிணைந்த இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர் பகத் சிங். அவரை, பெருமைப்படுத்தும் வகையிலும், அவரது தியாகத்தை உலகம் அறிந்து கொள்ளும் வகையிலும், இந்த ரவுண்டானாவுக்கு அவரது பெயரை வைக்க வேண்டும். மேலும், அங்கு அவரது சிலையையும் நிறுவ வேண்டும். பாகிஸ்தானின் தந்தை என போற்றப்படும் முகமது அலி ஜின்னாகூட, பகத்சிங்கின் தியாகத்தை பாராட்டி உள்ளார்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் அரசு வழங்கும், வீரத்துக்கான உயரிய விருதான, 'நிஷான் இ ஹைதர்' விருதை, பகத் சிங்குக்கு அளிக்க வேண்டும் என, இந்த அறக்கட்டளை கோரியிருந்தது. ஷாத்மான் சவுக்கின் பெயரை மாற்றுவதற்கு, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, ஜமாத் - உத் - தாவாவின் தலைவன், ஹபீஸ் சயீது எதிர்ப்பு தெரிவித்துள்ளான்.

மூலக்கதை