அமெரிக்காவில் துப்பாக்கிக்கு தடை விதிக்க டிரம்ப் தீவிரம்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் துப்பாக்கிக்கு தடை விதிக்க டிரம்ப் தீவிரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரிப்பதால் துப்பாக்கிக்களுக்கு தடை விதிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.அமெரிக்காவில், சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் வளர்ந்து வருகிறது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் துப்பாக்கிச்சூடு அதிகரிக்கிறது. கடந்த 14-ந் தேதி புளோரிடா, பார்க்லேண்ட் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் பலியாகினர். ஏற்கனவே தங்குதடையற்ற துப்பாக்கி பயன்பாட்டுக்கு எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வரும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளதால் குரல் வலுத்து வருகிறது.பார்க்லேண்ட் சம்பவத்தில் உயிர் தப்பிய மாணவர்கள், புளோரிடா தலைநகர் டலஹாசியில் சட்டசபை முன் நேற்று போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் ஒரே நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ரவுண்டுகள் சுட்டுத்தள்ள துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 'பம்ப்ஸ்டாக்' என்ற உபகரணத்துக்கு தடை விதிக்க டிரம்ப் முடிவு எடுத்துள்ளார்.பாதி தானியங்கி துப்பாக்கிகளில் இந்த 'பம்ப்ஸ்டாக்' பொருத்தி விட்டால், அது இயந்திர துப்பாக்கியாக மாறிவிடும். பல நூறு ரவுண்டுகள் சுடும். லாஸ்வேகாஸ் இசை விழா துப்பாக்கி சூடு சம்பவத்திலும் இந்த கருவி பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த 'பம்ப்ஸ்டாக்'கை வெறும் 100 டாலருக்கு (சுமார் ரூ.6,500) எளிதாக வாங்க முடியும்.தடை பற்றி டிரம்ப் குறிப்பிடும்போது, ''வெற்று பேச்சுகள், அர்த்தமற்ற விவாதங்களைக் கடந்து உருப்படியான தீர்வை நோக்கி நாம் செல்ல வேணடிய நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதில் முதல்கட்டமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்ட அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பும் அமெரிக்காவில் நடந்த பல துப்பாக்கிச்சூடு சம்பவங்களின்போது, துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இம்முறைதான் தடைக்கு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை