கமல்ஹாசனின் கட்சி மக்கள் நீதி மய்யம் மதுரையில் நடந்த விழாவில் அறிவித்தார்

PARIS TAMIL  PARIS TAMIL
கமல்ஹாசனின் கட்சி மக்கள் நீதி மய்யம் மதுரையில் நடந்த விழாவில் அறிவித்தார்

மதுரையில் 21-ந் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கப்போவதாக கூறிய அவர், இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கமல்ஹாசன் மதுரையில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் சென்றார். ராமேசுவரத்தில் இருந்து, ‘நாளை நமதே’ என்ற பெயரில் நேற்று அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

நேற்று காலை ராமேசுவரத்தில் உள்ள, மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்துக்கு சென்று அவரது அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்து பேசிய கமல்ஹாசன், பின்னர் மீனவர்களை சந்தித்து பேசினார். அதன்பிறகு ராமேசுவரத்தில் பேய்க்கரும்பு என்ற இடத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின், ராமநாதபுரத்துக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மதுரை திரும்பினார். மதுரை வரும் வழியில் பரமக்குடி, மானாமதுரையில் மக்களை சந்தித்தார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் கட்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதில் கலந்துகொள்வதற்காக, கமல் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அங்கு வந்து குவிந்து இருந்தனர்.

கமல்ஹாசன், காளவாசல் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அங்கிருந்து மாலை 6.40 மணிக்கு ஒத்தக்கடை மைதானத்திற்கு காரில் புறப்பட்டார். அவருடைய நற்பணி இயக்கத்தினர் கார்களில் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

வழியில், அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற கமல்ஹாசன் அங்கு தங்கி இருந்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.

பிறகு, ஒரே காரில் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் ஒத்தக்கடை பொதுக்கூட்டத்துக்கு புறப்பட்டனர். அவர்கள் பொதுக்கூட்ட மைதானத்தை வந்து அடைந்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர்.

சரியாக 7.30 மணிக்கு மேடையின் முன்பு உள்ள கம்பத்தில் கமல்ஹாசன் தனது கட்சி கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார். வெள்ளை நிறம் கொண்ட அந்த கொடியின் நடுவில் நட்சத்திரமும், அதை சுற்றி 6 கைகள் கோர்த்து இருப்பது போன்ற படமும் இடம்பெற்று உள்ளது.

கட்சி கொடியை ஏற்றி வைத்துவிட்டு மேடைக்கு சென்ற கமல்ஹாசன், தனது கட்சியின் பெயர் “மக்கள் நீதி மய்யம்” என்று அறிவித்தார். அப்போதும் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கட்சி கொடியில், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரும் இடம்பெற்று உள்ளது. கட்சியின் பெயரை அறிவித்து கமல்ஹாசன் பேசியதாவது:-

இது வாழ்க்கை முறை. இந்த சந்தோஷத்துடன் பெரும் பொறுப்பும் நமக்கு வந்து சேர்ந்து இருக்கிறது. இன்று இருக்கும் அரசியல் நிலவரத்துக்கு நீங்கள் எடுத்துக்காட்டாகவும், முன்னோடிகளாகவும் இருந்திட வேண்டும். அதற்கு அறிவுரை சொல்லும் தலைவர் அல்ல நான். அறிவுரை கேட்கும் தொண்டன்.

உங்களுக்கு நான் ஒன்றை அறிமுகம் செய்து வைக்க கடமைப்பட்டு இருக்கிறேன். என் தமிழ் தாய்க்குலத்துக்கும், என் சகோதர பெருந்தகைகளுக்கும் நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கையை உங்களுக்கு உதாரணம் ஆக்கி இருக்கிறேன். அதுதான் இது. இந்த சோற்று பருக்கையை தொட்டுப்பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப்பாருங்கள்.

விரல் சுடும். ஊழலில் தோய்ந்தே இருந்த உங்களின் விரல் சுடும். தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோல் பல கூட்டங்கள் நிகழ இருக்கின்றன. இப்போது நல்லவர்களின் நட்பும், ஆசியும் நமக்கு கிடைத்து இருக்கிறது.

கட்சி பொறுப்பாளர்கள் இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மேடையில், கமல்ஹாசன் அருகில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் சட்ட மந்திரியும், எம்.எல்.ஏ.யுமான சோம்நாத் பாரதி, விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

முதலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அடுத்து, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா, நடிகை ஸ்ரீபிரியா உள்பட 14 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் அறிவிக்கப்பட்டது.

பின்பு, கமல்ஹாசனின் புதிய கட்சியை வாழ்த்தி அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். இறுதியாக கமல்ஹாசன் நிறைவுரையாற்றினார். அப்போது மக்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
 

மூலக்கதை