சிரியாவில் அரசுப்படைகள் தாக்குதல் : குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 250 பேர் பலி

தினகரன்  தினகரன்

பெய்ரூட்: சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் கவுட்டா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 58 குழந்தைகள், 42 பெண்கள் உள்பட 250-க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதிபர் படை தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து வருகின்றன.இந்த நிலையில் உடனடியாக ஒருமாத காலம் அனைத்து தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்தி வைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என கூறப்பட்டாலும் பெருமளவு அப்பாவி மக்களே இதில் அதிகம் பேர் பலியாகி வருகின்றனர். சிரியாவில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் தொடங்கியது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷிய படைகள் 2015-ம் ஆண்டில் இருந்து வான்தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த உள்நாட்டு போரில் லட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.

மூலக்கதை