அகில இந்திய பார் கவுன்சிலை கலைக்க வேண்டும் ஐகோர்ட்டு கடும் கண்டனம்

PARIS TAMIL  PARIS TAMIL
அகில இந்திய பார் கவுன்சிலை கலைக்க வேண்டும் ஐகோர்ட்டு கடும் கண்டனம்

ரவுடிகள் உள்பட யார் வேண்டுமானாலும் வக்கீலாக பதிவு செய்யலாம்? என்ற நிலை உருவாகியுள்ளது. இதை தடுக்க முடியவில்லை என்றால், அகில இந்திய பார் கவுன்சிலை கலைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவோரின் தகுதிகளை நிர்ணயம் செய்து, நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி ஆகியோர் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் இருந்து நீதிபதி என்.கிருபாகரனும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் இருந்து நீதிபதி ஆர்.தாரணியும் இந்த வழக்கை நேற்று காணொலி காட்சி மூலம் மீண்டும் விசாரித்தனர்.

அப்போது, தங்களது உத்தரவுகளை அமல்படுத்த மறுத்த அகில இந்திய பார் கவுன்சிலுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீலிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் நபர்களின் தகுதிகளை நிர்ணயம் செய்து நாங்கள் உத்தரவிட்டோம். அந்த உத்தரவை அமல்படுத்த முடியாது என்று அகில இந்திய பார் கவுன்சில் எப்படி தீர்மானம் இயற்ற முடியும்?

எங்களது தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தான் மேல்முறையீடு செய்யவேண்டும். அதை ஏன் செய்யவில்லை? சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தைரியம் இல்லையா? இதுவரை தகுதியான நபர்கள் மட்டுமே பார் கவுன்சிலில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று கூற முடியுமா?

இதுவரை நாடு முழுவதும் எத்தனை புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கியுள்ளர்கள்? சட்டக்கல்வியின் தரத்தை ஏன் சீர்குலைக்கிறீர்கள்? டாஸ்மாக் மதுபானக் கடையில் வேலை செய்யும் நபர், வக்கீலாக பார் கவுன்சிலில் பதிவு செய்கிறார். அந்த அளவுக்கு பார் கவுன்சில் நிலை உள்ளது.

அதுமட்டுமல்ல ரவுடிகள் எல்லாம் வக்கீலாக பதிவு செய்துள்ளனர். யார் வேண்டுமானாலும் வக்கீலாக பதிவு செய்யலாம்? என்ற நிலை உருவாகியுள்ளது. இதை தடுக்க முடியவில்லை என்றால், பார் கவுன்சில் என்பது தகுதியில்லாத ஒரு அமைப்பு என்று தான் சொல்ல வேண்டும். அப்படி என்றால், இந்திய பார் கவுன்சிலை கலைக்க வேண்டும்.

யார் வேண்டுமானாலும் வக்கீலாகி விட முடியும் என்ற நிலையை, இப்போதே தடுக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினை உருவாகும். நேர்மையான முறையின் படித்து வரும் இளம் வக்கீல்களுக்கு பாதிப்பு வரும். இதை மனதில் கொண்டு தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். எங்களது நடவடிக்கைகளை பெரும்பாலான வக்கீல்கள் வரவேற்றுகின்றனர். ஒரு சிறு எண்ணிக்கையில் உள்ள வக்கீல்கள் தான் எதிர்க்கின்றனர்.

எங்களை பொறுத்தவரை ஓட்டுக்காக பணம், பரிசு பொருட்கள் கொடுக்காமல், பார் கவுன்சில் தேர்தல் நடைபெறவேண்டும். இந்த வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மூலக்கதை