மாலத்தீவில் நெருக்கடி நிலை : மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு

தினமலர்  தினமலர்

மாலே: மாலத்தீவில், நெருக்கடி நிலை, மேலும்,௩௦ நாட்கள் நீட்டிப்பதற்கு, அந்நாட்டு பார்லிமென்ட், நேற்று ஒப்புதல் அளித்தது. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவின் அதிபராக, அப்துல்லா யாமீன் அப்துல்லா கயூம் உள்ளார். அவருக்கு எதிராக, ஆளுங்கட்சியை சேர்ந்த, 12 எம்.பி.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இதனால் பார்லிமென்டில், எதிர்க்கட்சி பலம் அதிகரித்தது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, 12 பேரையும், அதிபர், தகுதி நீக்கம் செய்தார்; அவர்களில், 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து, நாட்டில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும், எம்.பி.,க்களையும் அரசு கைது செய்தது. இந்த வழக்கை மாலத்தீவு உச்ச நீதிமன்றம் விசாரித்து, 12 பேரின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ததோடு, கைது செய்த எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்யவும் உத்தரவிட்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்ய, அரசு மறுத்தது. இதனால், அரசு மீது, கோர்ட் அவமதிப்பு வழக்கை, உச்ச நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எதிர்க்கட்சி தலைவர்களை விடுதலை செய்யக் கோரி, மாலத்தீவில் போராட்டம் வலுத்தது. இதனால், இரண்டு வாரத்துக்கு, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து, அதிபர் கயூம், பிப்., ௫ல் உத்தரவிட்ட்டார். நெருக்கடி நிலை முடிய, இன்னும் இரண்டு நாட்கள் இருந்த நிலையில், நெருக்கடி நிலையை மேலும், ௩௦ நாட்கள் நீட்டிக்க, அதிபர் கயூம் பரிந்துரைத்தார். மாலத்தீவு பார்லிமென்ட் நேற்று கூடி, அதிபரின் பரிந்துரைக்கு, ஒப்புதல் அளித்தது. பார்லி., கூட்டத்தை, எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தன. ஆளும் கட்சியை சேர்ந்த, ௩௮ எம்.பி.,க்கள் மட்டும் வந்திருந்தனர். இதையடுத்து, மாலத்தீவில், மார்ச், ௨௨ வரை, நெருக்கடி நிலை அமலில் இருக்கும்.

மூலக்கதை