கம்யூ., கட்சிகள் இணைப்பு : நேபாளத்தில் திருப்பம்

தினமலர்  தினமலர்

காத்மண்டு: அண்டை நாடான, நேபாளத்தில், இரு முக்கிய, கம்யூ., கட்சிகள் இணைந்துள்ளது, புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.நேபாளத்தில், பிரதமர், கே.பி.ஒலி தலைமையிலான, சி.பி.என்.யு.எம்.எல்., எனப்படும், நேபாள ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கம்யூ., கட்சி அரசு உள்ளது. இது தவிர, முன்னாள் பிரதமர், பிரசந்தா தலைமையிலான, நேபாள மார்க்சிஸ்ட் - மாவோயிஸ்ட் சென்டர் என்ற கட்சியும் உள்ளது.கடந்த ஆண்டு டிசம்பரில், பார்லிமென்டுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, யாரும் எதிர்பாராத வகையில், இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மொத்தமுள்ள, 275 தொகுதிகளில், இந்த கூட்டணி, 174 தொகுதிகளில் வென்றது.அதற்கு முன், இரு கட்சிகளையும் இணைப்பது குறித்து பேசப்பட்டு வந்தது. தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பின், இந்த பணி வேகமெடுத்தது. இரு தரப்பு பிரதிநிதிகளும் கலந்து பேசி, கட்சிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி, நேபாள கம்யூ., என்ற பெயரில், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கொள்கை அடிப்படையில் செயல்படுவது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. கட்சியை, கே.பி.ஒலி, பிரசந்தா ஆகியோர் இணைந்து நடத்துவர். தலா, மூன்று ஆண்டுகளுக்கு, மாறி மாறி ஆட்சி புரிவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆட்சியிலும், நேபாள மார்க்சிஸ்ட் - மாவோயிஸ்ட் சென்டர் இணையும்.இணைப்புக்கான, இறுதி கட்ட பேச்சு முடியும் நிலையில் உள்ளது. மார்ச்சில், இணைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இரு கட்சிகளும் இணைந்தால், தற்போது, நேபாளத்தில் உள்ள, ஏழு மாகாணங்களில், ஆறில், கம்யூ., ஆட்சி இருக்கும். இவ்விரு கட்சிகளும் இணைவது, அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 10 ஆண்டுகளில், 10 பிரதமர்களை, நேபாளம் சந்தித்துள்ளது.

மூலக்கதை