அமெரிக்க நிறுவனங்களுக்கு மாற்று மையமாக இந்தியா : இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர்

தினமலர்  தினமலர்

இந்திய - அமெரிக்க வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் நல்ல உறவு இருந்து வருகிறது. இந்த உறவு பற்றி இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஐ.ஜஸ்டர் கூறியதாவது...

சர்வதேச விவகாரங்களில் பிற உறவுகளைப் போல அமெரிக்க - இந்திய உறவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. நமது செயல்நோக்கு கூட்டாண்மை இரு நாடுகளைப் பலப்படுத்துவதுடன் இந்திய - பசிபிக் மண்டலத்தில் பயனளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வகுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 17 ஆண்டுகளில் செயல்நோக்கு கூட்டாண்மைக்கு நாம் வலுவான அடித்தளம் அமைத்திருக்கிறோம். அது 21-ம் நூற்றாண்டிலும் அதன் பிறகும் சாதகமான விளைவுகளை உருவாக்கும். இந்த அடித்தளத்தை இன்னும் இணக்கமுள்ளதாகவும், குறித்த நோக்கு நிறைந்தாகவும் மாற்ற வேண்டிய தருணம் இது.

நமக்கிடையிலான இடையூறுகளைக் கடந்து இந்த பிராந்தியத்துக்கான நிலையான கட்டமைப்பை உருவாக்க முயல வேண்டும். அமெரிக்க - இந்திய செயல்நோக்கு கூட்டாண்மையை நீடித்து நிலைத்து நிற்கும் உறவாக மாற்ற வேண்டியது அவசியம்.

சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற இந்திய - பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவது அமெரிக்காவின் நீண்டகால கடப்பாடாகும். இது, நம் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், இந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலும். நமது எதிர்காலம் பிரிக்கமுடியாத அளவுக்கு இப் பிராந்தியத்துடன் இணைந்திருப்பதாலும், விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கை மதிப்பவர்கள் என்பதாலும், அமெரிக்கா இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு செயலாற்றுவதில் உறுதியுடன் நிற்கும்.

இந்த முயற்சியில் இந்தியாவின் தலைமைத்துவத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்திய -பசிபிக் பிராந்தியத்தை, சுரண்டல் பொருளாதாரக் கொள்கை, சச்சரவுகள், ஒழுங்கின்மை ஆகியவற்றுக்கு மாறாக, அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றின் வளரும் அடையாளமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லசர்சன் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றை உறுதி செய்யும் வகையில், இந்த பிராந்தியத்தை உருவாக்க, ஒத்த கருத்துடைய கூட்டாளிகளுடன் இணைந்து செயலாற்ற அமெரிக்கா விரும்புகிறது.

பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு என்பது நமது கூட்டாண்மையின் முக்கியத் தூண்களில் ஒன்று. அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கெனவே இந்தியாவில் முதலீடு செய்து, முக்கியமான பாதுகாப்புத் தளவாடங்களுக்குத் தேவையான பாகங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இத்தகைய பொருட்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனை முன்னெடுக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறது. அத்துடன், இந்திய - பசிபிக் பிராந்தியத்தின் முக்கியமான கூட்டாளிகள் என்ற அடிப்படையில், இரு நாட்டு ராணுவமும் கூடுதல் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான வாய்ப்பை அமெரிக்கா விரும்புகிறது.

இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவில் நாம் செலுத்திய அதே கூட்டாண்மை நோக்கை பொருளாதார உறவிலும் செயல்படுத்த வேண்டும். இந்தப் பிராந்தியத்திலுள்ள சீனா போன்ற பெரும் சந்தை வாய்ப்புள்ள நாடுகளில், தொழில்களை நடத்துவதில் தொடர்ந்து இடையூறுகளை சந்தித்து வருவதாக பல அமெரிக்க நிறுவனங்கள் கூறியுள்ளன. இதனால், சில நிறுவனங்கள் அப்பகுதியில் தங்கள் செயல்பாட்டைக் குறைத்துக் கொண்டுள்ளன. பிற நிறுனங்கள் பெரும் ஆர்வத்துடன் மாற்றுச் சந்தையை நாடுகின்றன.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு மூலம், இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்கத் தொழில் நிறுவனங்களுக்கான மாற்று மையமாக இந்தியா திகழ முடியும். இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சி சார்ந்த பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு, சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகம் ஆதரவாகவும் ஊக்கமாகவும் அமையும்.

மேலும், “அமெரிக்கா முதல்” மற்றும் “இந்தியாவில் தயாரியுங்கள்” ஆகிய இரண்டும் எதிரானது அல்ல. மாறாக, ஒருவருக்கொருவர் பிற சந்தைகளில் முதலீடு செய்வது, நமக்கிடையிலான பொருளாதாரப் பிணைப்பையும் வர்த்தக அளவையும் அதிகரித்து புதிய தொழில்நுட்பங்களிலும் கூட்டுறவுக்கான வாய்ப்பைத் தருவதுடன் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

பொருளாதார மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை முடுக்கிவிடும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி ஏற்கெனவே தொடங்கிவிட்டார். இது இந்தியாவை, வேகமாக வளரும், திறன் சார்ந்த, வெளிப்படையான மற்றும் நெறிமுறைப்படுத்தப்பட்ட சந்தையாக உறுதிப்படுத்த உதவும். தொடரும் சீர்திருத்தங்கள் மற்றும் தாராளமயமாக்கம் இந்தியப் பொருள்கள் உலகச் சந்தையில் உடனுக்குடன் இடம்பெற ஊக்கமளிக்கும். அது வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும் வழிவகுக்கும். அமெரிக்கத் தொழில் நிறுவனங்களுக்கான மாற்று பிராந்திய மையமாக இந்தியாவை மாற்றுவதும், வளரும் இருதரப்பு பொருளாதார உறவும் பல்வேறு பலன்களை அளிக்கும்.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த உலகத் தொழில்முனைவோர் மாநாட்டில் இதற்கான அடையாளம் வெளிப்பட்டது. புதுமைகளை வரவேற்கும் சூழ்நிலையை உருவாக்குவதில் இந்த மாநாடு முக்கியப் பங்களித்திருக்கிறது. தொழில்துறை மற்றும் புத்தாக்கத்தில் அமெரிக்கா உலகின் முன்னணி நாடு. தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுடன் ஏற்கெனவே நெருங்கிய தொடர்பு கொண்டது.

இந்நிலையில், இந்தியச் சந்தையை அமெரிக்க வர்த்கம் மற்றும் முதலீட்டுக்கு திறந்துவிடுவது, புதிதாக வளரும் பல தொழில்நுட்பங்களில் இந்திய-அமெரிக்க கூட்டுறவை அதிகரிக்கும். அது நவீன உற்பத்தி மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பானவை உள்பட பலவகைகளில் நமது நாடுகளின் பொருளாதாரத்துக்கு ஊக்கமாகவும் பாதுகாப்பாகவும் அமையும்.

வலுவான அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்ட அமெரிக்காவின் வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகமானால், அது பலவழிகளில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதுடன் அறிவுசார் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஏதுவாக அமையும். தொழில்நுட்ப பரிவர்த்தனைகள் காலத்திற்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவை. அதற்கு நாடுகளுக்கிடையே தங்கு தடையற்ற பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் இருந்தால் தான் சாத்தியம்.

அமெரிக்கப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான விரிந்த வாய்ப்புகள், அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் கூடுதல் செயல்பாடுகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதுடன் ஒட்டுமொத்த போக்குவரத்து வசதியையும் மேம்படுத்தும். உதாரணமாக, 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க வேண்டும் என்ற இந்தியாவின் பெரும் நோக்கம் நிறைவேற புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்ட அமெரிக்க நிறுவனங்கள் உதவ முடியும்.

கூட்டுறவுக்கு வாய்ப்புள்ள இன்னொரு துறை, எரிசக்தி. விரிவான எரிசக்தித் துறை கூட்டுறவை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக இருக்கிறது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, அணுமின் சக்தி உள்ளிட்ட அனைத்துவிதமான எரிசக்திகளும் இதில் அடங்கும். மேலும் புதைபடிவ எரிபொருள்களை சுத்தப்படுத்துவது, திறன்மிகு மின்தொகுப்புகள், எரிசக்தி சேமிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் ஆகியவை தொடர்பான தொழில்நுட்பங்களையும் அமெரிக்கா வழங்க இயலும்.

கடந்த ஆண்டு, முதல்முறையாக பெரிய அளவில் அமெரிக்கா கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. இந்தியாவின் உள்நாட்டு எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்துவது மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளுக்கு, தொழில்நுட்பம் உள்பட தேவையான இதர சேவைகளையும் அமெரிக்கா வழங்க முடியும்.

திடமாக வளர்ந்து வரும் இந்திய-அமெரிக்க பொருளாதார உறவு, இந்தியா மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியம் சார்ந்த உறுதியான, ஆழமான நீண்ட கால கடப்பாடுகளை அமெரிக்கத் தரப்பில் உருவாக்கும். இது இருநாடுகளுக்கிடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்புத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுறவுக்கு வலு சேர்ப்பதுடன், இடையே எழக்கூடிய கொள்கை வேறுபாடுகளைக் களையவும் வழி வகுக்கும்.

அமளி சூழ்ந்த இன்றைய உலகில், அமெரிக்க-இந்திய கூட்டாண்மையின் வலிமை என்பது நிலையானது. எப்போதும் அப்படியே இருக்க வேண்டும். இந்தியாவும், அமெரிக்காவும் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை பேணிக் காக்கும் தருணத்தில், நமது கூட்டாண்மையின் உண்மையான மதிப்பு என்பது இரு நாடுகளும் இணைந்து சர்வதேச விவகாரங்களில் நேர்மறை தாக்கத்தை உருவாக்குவதுதான். நமது மக்களின் பாதுகாப்பு மற்றும் வளம் சார்ந்த உயரிய நோக்கங்களைச் சாதிப்பதும் இதில் அடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை