சச்சினின் சாதனையை விராட் கோஹ்லி முறியடிப்பார்!

PARIS TAMIL  PARIS TAMIL
சச்சினின் சாதனையை விராட் கோஹ்லி முறியடிப்பார்!

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கட் ஜாம்பவானுமாகிய சச்சின் டென்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முறியடிப்பார் என அணியின் முன்னாள் வீரர் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
 
ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகள் மற்றும் ரி-ருவென்ரி போட்டி என முப்பரிமாண கிரிக்கட் போட்டிகளிலும் திறம்பட செயற்படும் விராட் கோஹ்லி அண்மையில் நடைபெற்ற தென் ஆபிரிக்க அணியுடனான தொடரில் மாத்திரம் 4 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் தனது 35 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் விஸ்வநாத், “விராட் கோஹ்லியின் விளையாட்டு நிலையாகவே உள்ளது. அவர் ஓட்டங்களை குவிக்கும் இயந்திரமாக உள்ளார். சதங்கள் அடிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் சச்சினின் 100 சதங்கள் சாதனையை அவரால் முறியடிக்க முடியும். ஆனாலும் அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். சாதனைகள் முறியடிக்க கூடியதே. துடுப்பாட்டத்தில் மாத்திரமல்ல அணித்தலைமையிலும் விராட் கோஹ்லி சிறப்பாக செயற்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
 
ஓட்டுமொத்தமாக 664 சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் அடித்து சாதனைப் பட்டியலில் இன்னமும் சச்சின் டென்டுல்கர் முதலிடத்திலுள்ளார். அதேவேளை 330 சர்வதேச போட்டிகளில் 56 சதத்துடன் விராட் கோஹ்லி சாதனைப் பட்டியலில் ஐந்தாவது இடத்திலுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை