சசிகலா கட்டாயப்படுத்தியதால் தான் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகினேன் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
சசிகலா கட்டாயப்படுத்தியதால் தான் முதல்அமைச்சர் பதவியில் இருந்து விலகினேன் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

சசிகலா கட்டாயப்படுத்தியதால் தான் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகினேன்’ என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

மதுரையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று சசிகலா மற்றும் கட்சியினர் வற்புறுத்தினர். ஆனால் இதற்கு நான் மறுத்தேன். அப்போது அவர்கள், நீங்கள் பொறுப்பேற்றால் தான் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்றனர். எனவே அவர்கள் கட்டாயப்படுத்தியதால் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றேன்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனை பொறுக்க முடியாமல் சசிகலா, தினகரன் ஆகியோர் என்னை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். அதனால் தான் நான் முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகினேன். தினகரன் ஞாபக சக்தி குறைந்தவர். எனவே அவருக்கு இதனை ஞாபகப்படுத்துகிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு காரணம் ஜெயலலிதா நடத்திய சட்ட போராட்டங்கள் தான். காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க. அரசை குறை கூற தி.மு.க.விற்கு எந்த தகுதியும் கிடையாது.

தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு ஆட்சியை கலைக்க முயற்சி செய்தார். அந்த சமயத்தில் நான் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து இதுகுறித்து கூறினேன். அப்போது அவர் நல்ல எண்ணத்தில் அ.தி.மு.க. அணிகள் இணைந்து செயல்படுவது நல்லது என்றார்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும், நானும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள், “நீங்கள் முதல்-அமைச்சராக இருந்தபோது சசிகலா உங்களை தற்கொலைக்கு தூண்டினாரா?” என்று கேட்டனர். அதற்கு அவர், “இந்த கேள்வியே தவறு. எனது இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தற்கொலை செய்யும் சூழ்நிலைக்கு சென்று இருப்பார்” என்று தான் கூறினேன். தொடர்ந்து அவரிடம், கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு, “தேர்தல் வரட்டும் பார்க்கலாம்” என்றார்.

மூலக்கதை