நாசாவுக்கு கடிதம் எழுதி பிரபலமான 6 வயது சிறுமி!

PARIS TAMIL  PARIS TAMIL
நாசாவுக்கு கடிதம் எழுதி பிரபலமான 6 வயது சிறுமி!

அயர்லாந்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, புளூட்டோவை மீண்டும் கோளாக அறிவிக்க வேண்டும் என நாசாவிற்கு கடிதம் எழுதியதன் மூலம் பிரபலமாகியுள்ளார்.
 
நமது சூரியக் குடும்பத்தில் 9வது கோளாக, கடந்த 1930ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது புளூட்டோ. ஆனால், கடந்த 2006ஆம் ஆண்டு புளூட்டோ ஒரு கோள் அல்ல, அது குறுங்கோள் என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
 
ஏனெனில், 8வது கோளாக உலா வரும் நெப்டியூனின் சுற்றுவட்டப் பாதையில், புளூட்டோ குறுக்கிடுவதால் பூமியின் நிலவான சந்திரனை விட அளவில் சிறிய புளூட்டோ, கோள் அந்தஸ்தை இழந்தது.
 
அதனைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் புளுட்டோவிற்கு கோள் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
இந்நிலையில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமியான காரா லூசி ஓ கான்னர், இதே கோரிக்கையை முன் வைத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாசாவிற்கு கடிதம் எழுதினார்.
 
அந்த கடிதத்தில், ‘நான் கேட்ட ஒரு பாடலின் முடிவில், புளூட்டோவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று இருந்தது, அது நிறைவேற ஆசைப்படுகிறேன்.
 
மற்ற கோள்களைப் போல புளூட்டோவும் முக்கிய கோளாக இருக்க வேண்டும். ஏனென்றால், நான் பார்த்த ஒரு வீடியோவில், கடைசி கோளாக இருக்கும் புளூட்டோவை நாம் சென்று பார்ப்போம் என்று சொல்லப்பட்டது.
 
மற்றொரு வீடியோவில், பூமியால் புளூட்டோ குப்பையில் போடப்பட்டது என இருந்தது, எந்தவொரு கோளையும் குப்பையில் போடக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.
 
இந்த கடிதத்தை சிறுமி தனது ஆசிரியையின் உதவியுடன் எழுதியிருந்தார். சிறுமியின் கடிதத்தை கண்டு வியந்த, நாசாவின் கோள்கள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கிரீன், தற்போது சிறுமிக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
 
அதில், ‘நான் உனது கருத்துடன் ஒத்துப்போகிறேன், உண்மையில் புளூட்டோ ஒரு குளிர்ச்சியான கோள் தான். புளூட்டோவுக்கு இதயம் இருக்கக்கூடும் என்பது சிலரின் நம்பிக்கை, இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கும்.
 
என்னை பொருத்தவரை, புளூட்டோ ஒரு சிறிய கோளா இல்லையா என்பது முக்கியமல்ல, புளூட்டோ ஒரு வசீகரமான இடம், அது பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
 
நீ பெரியவளாகி, ஒரு புதிய கோளை கண்டுபிடிப்பாய் என நம்புகிறேன். நீ நன்றாக படித்து, பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், நாசாவில் உன்னை சந்திப்பதற்காக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
 
நாசாவில் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியாளராகி, புளூட்டோ உள்ளிட்ட அனைத்து முக்கிய கோள்களுக்கும் சென்று வர வேண்டும் என்பது தான் காராவின் ஆசையாம்.
 
 

மூலக்கதை