நாகேஷ் திரையரங்கம்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
நாகேஷ் திரையரங்கம்

நாயகன் ஆரி நேர்மையான வீட்டு புரோக்கர். யாரையும் ஏமாற்றி, பொய் சொல்லி வீட்டு மனைகளை விற்கக் கூடாது என்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறார். அம்மா, தம்பி மற்றும் வாய்பேச முடியாத தங்கை அதுல்யா என இவர்களது குடும்ப பாரத்தை ஒரு நல்ல வேலையில் இருக்கும், ஆரியின் தம்பி கவனித்துக் கொள்கிறார்.

பொய் சொல்லி பணம் சம்பாதிக்க தெரியாமல் இருக்கும் தனது மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவன் ஒரு வழிக்கு வருவான் என்று ஆரியின் அம்மா பெண் தேடுகிறார். அதில் ஆஷ்னா ஷவேரியை அவருக்கு பேசுகின்றனர். நல்ல பணக்காரனாக, ஐ.டியில் வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஆஷ்னா, ஆரியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.

பின்னர் ஒருகட்டத்திற்கு மேல் ஆரியின் நல்ல குணம் அறிந்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், ஆஷ்னாவின் நண்பர், அதுல்யாவை காதலிப்பதாக சொல்லி பெண் கேட்க, சம்மதம் தெரிவிக்கும் ஆரி, அவரை குடும்பத்துடன் வந்து பெண் கேட்கும்படி அழைக்கிறார்.

பின்னர் அதுல்யாவுக்கும், அவளது காதலருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. பின்னர் மணமகன் வீட்டாருக்கு வரதட்சனை கொடுப்பதற்காக அதுல்யா பெயரில் இருக்கும் நாகேஷ் திரையரங்கத்தை விற்க ஆரி முடிவு செய்கிறார்.

அதற்காக ஆரி மற்றும் காளி வெங்கட் அந்த திரையரங்கிற்கு செல்கின்றனர். அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்கிறது. அந்த திரையரங்கில் பேய் இருப்பதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். அதேநேரத்தில் ஆரியின் கனவில் வரும் நபர்கள், நிஜத்தில் ஒவ்வொருவராக இறக்கின்றனர்.

இவ்வாறாக குழப்பங்களுக்கு இடையே கடைசியில் ஆரி, நாகேஷ் திரையரங்கத்தை விற்றாரா? அதுல்யா திருமணத்தை நடத்தினாரா? ஆஷ்னா சவேரியுடன் இணைந்தாரா? அந்த கனவில் நடந்தது சம்பவத்திற்கும், என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆரி எந்தவித அலட்டலுமின்றி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். குடும்பம், தொழில் என முதல் பாதியில் வீட்டு புரோக்கராகவும், அடுத்த பாதியில் நாகேஷ் திரையரங்கத்தில் அமானுஷ்ய காட்சிகளுக்கு நடுவே ரசிக்க வைத்திருக்கிறார். ஆஷ்னா ஷவேரி கொடுத்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார். அதுல்யா ரவி மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். மாசூம் சங்கர் கவர்ச்சியுடன் வந்து கலகலப்பூட்டுகிறார். பேயாக வந்தும் அலட்டலின்றி தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காளி வெங்கட் காமெடியில் முத்திரை பதிக்க முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பலன் கிடைத்துள்ளது என்று சொல்லலாம். சித்ரா லட்சுமணன், மனோபாலா, அணில் முரளி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.

முதல் பாதியில் குடும்பம், காதல், காமெடி என மசாலாவாகவும், அடுத்த பாதியில் பேய், பயம் எனவும் ரசிக்கும்படியாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஐசாக். முதல் பாதியில் விறுவிறுப்பு இருந்தாலும், இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் தொய்வு இருப்பது போன்று தோன்றுகிறது. அதேபோல் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி வித்தியாசமான, ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு.

ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பயம் வரும் காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. இ.ஜே.நுசாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `நாகேஷ் திரையரங்கம்’ திரையரங்கில் பார்க்கலாம்.

மூலக்கதை