2 குழந்தைக்கு மேல் பெற்றால் தண்டனை கிடைக்குமா..?

தினமலர்  தினமலர்
2 குழந்தைக்கு மேல் பெற்றால் தண்டனை கிடைக்குமா..?

புதுடில்லி: நாடு முழுவதும், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை, கண்டிப்பாக அமல்படுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மூன்று பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் தொகை :

உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர்கள், அனுஜ் சக்சேனா, பிருத்விராஜ் சவுகான், பிரியா சர்மா ஆகியோர் தாக்கல் செய்த பொது நலன் மனுக்கள் விபரம்: மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான புள்ளியியல் தகவல்கள், 2022க்குள், நம் நாட்டு மக்கள் தொகை, 150 கோடியை தாண்டும் என கூறுகின்றன.

வேலையில்லா திண்டாட்டம், வறுமை, எழுத்தறிவின்மை, மோசமான சுகாதாரம், சுற்றுச்சூழல் மாசு, உலக வெப்பமயமாதல் ஆகியவை, மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் சில தீய விளைவுகள். இவற்றை, நம் நாடு, தற்போது அனுபவித்து வருகிறது.எனவே, நாடு முழுவதும், இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.

நடவடிக்கை:

இதை பின்பற்றுவோருக்கு பரிசு, பின்பற்றத் தவறுவோருக்கு தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பான கொள்கையை வகுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை, இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை