சிக்­க­லான நேரங்­களில் முத­லீட்­டா­ளர்கள் என்ன செய்ய வேண்டும்?

தினமலர்  தினமலர்
சிக்­க­லான நேரங்­களில் முத­லீட்­டா­ளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒரு நிறு­வனம் மோச­மான செய்­தியால் பாதிப்­புக்­குள்­ளாகும் போது, அந்­நி­று­வ­னத்தின் பங்­கு­களில் முத­லீடு செய்­துள்­ள­வர்கள் என்ன செய்ய வேண்டும் என்­பது பற்றி ஓர் அலசல்.

அண்­மையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளை மூலம் பெரிய அளவில் மோசடி நடை­பெற்­றுள்­ளது தொடர்­பான செய்தி, வங்­குத்­து­றையில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும் பங்­குச் ­சந்­தை­யிலும் இதன் தாக்கம் எதி­ரொ­லித்­தது. இந்த செய்­தியை அடுத்து, வங்­கியின் பங்­குகள் விலை சரிந்­துள்­ளது. இந்த செய்­தியில் தொடர்­பு­டைய கீதாஞ்­சலி ஜெம்ஸ் உள்­ளிட்ட நிறு­வன பங்­கு­களும் சரிந்­துள்­ளன. இது போன்ற மோச­மான செய்தி ஒரு நிறு­வன பங்­குகள் விலையை பதம் பார்ப்­பது இது முதல் முறை அன்று. பத்­தாண்­டு­க­ளுக்கு முன், சத்யம் கம்ப்­யூட்டர் நிறு­வ­னத்தில் முறை­கேடு தொடர்­பான செய்தி வெளி­யான போது அதன் பங்­குகள் சரிந்­தன. பின்னர் கிங்­பிஷர் ஏர்லைன்ஸ் நிறு­வனம் நெருக்­க­டிக்கு உள்­ளான போதும் அதன் பங்­குகள் வீழ்ச்சி அடைந்­தன.

அலசி ஆரா­யுங்கள்!
மோசடி, முறை­கேடு உள்­ளிட்ட மோச­மான செய்­தி­களால் பாதிக்­கப்­படும் நிறு­வ­னங்கள் அதி­லி­ருந்து மீண்டு வரு­வது தொடர்­பான கேள்­விகள் ஒரு­புறம் இருக்க, இந்த நிறு­வன பங்­கு­களை வாங்கி வைத்­துள்ள முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு வேறு வித­மான சிக்­கலை ஏற்­ப­டு­கின்­றது. இது போன்ற சிக்­க­லான நேரங்­களில், சில்­லரை முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் குழப்­பமும், பீதியும் ஏற்­ப­டு­வது இயல்­பா­னது தான். அவர்கள் முத­லீட்டை தொடர்­வது சரி­யாக இருக்­குமா; அல்­லது வெளி­யே­று­வது ஏற்­ற­தாக இருக்­குமா?

மோசடி அல்­லது முறை­கேடு எதிர்­கா­லத்தில் எந்த அளவு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­பதை ஆய்வு செய்து அறிந்து கொள்ளும் சாத்­தியம் இல்லை எனில் சில்லரை முத­லீட்­டா­ளர்கள் உட­ன­டி­யாக பங்­குகள் விற்று விட்டு வெளி­யே­று­வது சரி­யாக இருக்கும் என்­பது வல்­லு­னர்கள் கருத்­தாக இருக்­கி­றது.

நஷ்­டத்­திற்கு விற்கும் நிலை ஏற்­பட்­டாலும் வெளி­யேற வேண்டும் என்­கின்­றனர். அதே நேரத்தில் நிறு­வன பங்கின் தற்­போ­தைய விலையை கருத்தில் கொள்ள வேண்டும்.வெளி­யே­று­வதா, வேண்­டாமா என்­பது, நிறு­வ­னத்தின் அடிப்­படை அம்­சங்­களை பொறுத்து அமையும் என்றும் வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர். பொது­வாக பங்­கு­களில் முத­லீடு செய்யும் போது, அதன் அடிப்­படை அம்­சங்­க­ளுக்கே அதிக முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­கி­றது. நிறு­வன அடிப்­ப­டைகள் வலு­வாக இருந்து, நிறு­வ­னத்தை சரிவில் இருந்து மீட்கும் ஆற்றல் அதன் தலை­மைக்கு இருப்­ப­தாக நம்­பிக்கை ஏற்­பட்டால், அல்­லது அத்­த­கைய தலை­மையால் கைய­கப்­ப­டுத்தும் வாய்ப்பு இருப்­ப­தாக தோன்­றினால், முத­லீட்டை தொட­ரலாம் என்றும் சொல்­கின்­றனர்.

நேரடி முத­லீடு:
மோச­மான செய்­தியால் பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னத்தில் முத­லீடு செய்­துள்­ள­வர்கள், அதன் புள்­ளி­வி­ப­ரங்கள் மற்றும் செயல்­பா­டுகள் குறித்த செய்­தி­களில் கவனம் செலுத்த வேண்டும். அவை தரும் புரிதல் அடிப்­ப­டையில் முத­லீட்டை தொடர்­வது பற்றி தீர்­மா­னிக்­கலாம். இதற்­கான சாத்­தியம் இல்லை எனில், வெளி­யே­று­வது பொருத்­த­மான முடி­வாக அமையும். எனினும் சில்லரை முத­லீட்­டா­ளர்­களை பொறுத்­த­வரை, நிறு­வன பங்­கு­களில் நேர­டி­யாக முத­லீடு செய்­வ­தற்கு பதில் மியூச்­சுவல் பண்ட் திட்­டங்கள் மூலம் பங்­கேற்­பதே சரி­யாக இருக்கும் என்ற கருத்தும் முன் வைக்­கப்­ப­டு­கி­றது. இது போன்ற நேரங்­களில் மியூச்­சுவல் பண்ட் திட்­டத்தை நிர்­வ­கிக்கும் நிதி மேலாளர் தேவை­யான முடி­வு­களை மேற்­கொள்வார். எனினும் நேரடி முத­லீட்டை விரும்பும் முத­லீட்­டா­ளர்கள் அதற்­கேற்ப எச்­ச­ரிக்­கை­யான அணு­கு­மு­றையை பின்­பற்ற வேண்டும் என, ஆலோ­சனை சொல்­கின்­றனர்.

மூலக்கதை