ஆவடி பகுதியில் மூன்று இலக்க லாட்டரி விற்பனை... அமோகம்!

தினமலர்  தினமலர்
ஆவடி பகுதியில் மூன்று இலக்க லாட்டரி விற்பனை... அமோகம்!

தமிழக அரசு, லாட்டரி விற்பனையை தடை செய்துள்ள போதிலும், ஆவடியில், லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஆட்டோ ஓட்டுனர்கள், தினக்கூலி பணியாளர்கள் பலர், அதிர்ஷ்டத்தை நம்பி, குடும்பங்களை, நடுத்தெருவில் நிறுத்தும் அவலமும், தொடர்வதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

'எனக்கு, 425ல் ஒன்னு... எனக்கு, 452ல், ஒரு ஆறு... இந்த இரண்டும் வராது; 440 தான்... இன்று சனி உச்சத்தில்... இந்த நம்பர் தான் அடிக்கும்...' என, ஆவடி, பகுதிகளில், தினக்கூலி பணியாளர்கள், குழு, குழுவாக இணைந்து உரையாடுவதை எளிதாக பார்க்க முடிகிறது.

என்ன தான் நடக்கிறது அங்கு என, விசாரித்தால், அரசால் தடை செய்யப்பட்டும், மறைமுகமாக நடந்து வரும், மூன்று இலக்க லாட்டரியை பற்றியது தான், அந்த விவாதம் என்கின்றனர். இது குறித்து, மேலும் விசாரித்த போது, ஆவடியில், அமோகமாக நடந்து வரும் லாட்டரி தொழில் குறித்தும், அதன், 'நெட்வொர்க்' குறித்தும், பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

குலுக்கல் முறை:
ஆவடி, புதிய ராணுவ சாலையில் உள்ள, நேரு பஜார், கோவர்த்தனகிரி, ஓ.சி.எப்., சாலையில் திரையரங்கம் அருகே, சேக்காடு உள்ளிட்ட இடங்களில், கேரள லாட்டரி, பூடான் லாட்டரி, மூன்று நம்பர் லாட்டரி என, விதவிதமாக, லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.வெள்ளை காகித எண்களை, 60 - -600 ரூபாய் வரை, பணம் கொடுத்து, வாங்கி செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு, மூன்று முறை குலுக்கல் நடக்கிறது.

வெள்ளைக்காகித லாட்டரி மோகம், ஆவடியில் அதிகரித்திருப்பதால், விற்பனையும் அமோகமாக நடக்கிறது. குலுக்கல் நேரங்களில், ஆட்டோ ஓட்டுனர்கள், சிறுவியாபாரிகள், பெரும் பரபரப்பாக காணப்படுகின்றனர்.காலை, 7:00 மணிக்கு லாட்டரி விற்பனை துவங்கி, இரவு, 8:00 மணிக்கு முடிகிறது. பரிசுத்தொகையில், கமிஷன் பெற்று, லாட்டரி ஏஜன்டுகள், பணமழையில் நனைகின்றனர்.

இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, அடுத்த நிமிடமே, பரிசு தொகையை வழங்குகின்றனர். இதனால், மூன்று இலக்க லாட்டரி மீது, அபார நம்பிக்கையில், தினக்கூலி பணியாளர்கள், லாட்டரி போதையில் மிதக்கின்றனர். லாட்டரியில், தினமும் சம்பாதிக்கும் பணத்தை இழந்து, பலர், தங்கள் குடும்பங்களை, நடுத்தெருவில் நிறுத்தி உள்ளனர். ஒழிக்க வேண்டும்

தமிழக அரசு, 2002ல், லாட்டரி விற்பனையை தடை செய்த போதிலும், அங்கொன்று, இங்கொன்றாக, லாட்டரி, 'நெட்வொர்க்' தமிழகத்தில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், ஆவடியில், வீதிக்கு வீதி, லாட்டரி விற்பது தான், 'ஹைலைட்' என்கின்றனர், விபரம் அறிந்தவர்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் லாட்டரி விற்பனையை, காவல் துறையினர் ஒழிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நகர் முழுவதும், 'நெட்வொர்க்':
லாட்டரி விற்பனையை, கவனிக்க, ஆவடியில் மட்டும், ஒரு ஏஜென்ட் உள்ளார். அவருக்கு கீழ், இரண்டு மேலாளர்கள், 10 பேர் என, ஒரு ரகசிய அமைப்பாக செயல்படுகின்றனர். உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவும், இந்த, 'நெட்வொர்க்' இருப்பதால், போலீசார், கிடைத்த வரை மாமூல் பெற்றுக் கொண்டு, லாட்டரி விற்பனையை, கண்டுகொள்ளாமல் உள்ளனர்.



வலைவிரிக்கும், 'வாட்ஸ் ஆப்' குழுக்கள்!
சென்னையில், லாட்டரி உலகிற்கு, புதியவர்களை இழுக்கும் முயற்சியில், பல்வேறு பெயர்களில், 'வாட்ஸ் ஆப்' குழுக்கள், இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இந்த குழுக்களில், லாட்டரி எண்ணை தேர்வு செய்வது, அதற்கான கணக்கீடு, இன்றைய பரிசு எண்ணிற்கான கணக்கீடு என, பல கோணங்களில் விவாதம் நடக்கிறது.நாளைய பரிசுக்கான எண்ணை கண்டறிய, இந்த, 'வாட்ஸ் ஆப்' குழுக்களில், ஒரு பெரும் விவாத யுத்தமே நடக்கிறது.இந்த குழுக்களின் நோக்கமே, புதிதாக லாட்டரி உலகத்திற்கு வருபவர்களை, மீண்டும், மீண்டும் லாட்டரி சீட்டு வாங்க வைப்பது தான்.கேரளா லாட்டரி கில்லர், இழந்ததை மீட்போம், கேரளா வின்னர், கே.எல்., ஹேப்பி கெஸ்சிங் பிளேயர் உள்ளிட்ட, பல்வேறு பெயர்களில், சென்னையில் மட்டும், 10க்கும் மேற்பட்ட, லாட்டரி பிரியர்களுக்கான, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள், பரபரப்பாக இயங்கி வருகிறது.



லாட்டரி விற்பனை நடக்கிறதா என, ஒரு வாரத்திற்கு முன் கூட, சோதனை நடத்தினோம். உளவுத்துறை போலீசார் மூலம், லாட்டரி விற்பனையை, தொடர்ந்து கண்காணிக்கிறோம். தற்போதைக்கு, ஆவடியில், மூன்று இலக்க லாட்டரி விற்பனை இல்லை. எங்காவது, லாட்டரி விற்பதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.
-நந்தகுமார், ஆவடி உதவி கமிஷனர்.



லாட்டரி பரிசு தொகை (ரூ)
ரூ.60 கேரள லாட்டரிமூன்று இலக்கம் 25,000இரண்டு இலக்கம் 1,000ஒரு இலக்கம் 100
ரூ.70 பூடான் லாட்டரிமூன்று இலக்கம் 33,000இரண்டு இலக்கம் 3,000ஒரு இலக்கம் 200
ரூ.150 லாட்டரி சீட்டுமூன்று இலக்கம் 75,000இரண்டு இலக்கம் 3,000ஒரு இலக்கம் 200
ரூ.600 லாட்டரி சீட்டுமூன்று இலக்கம் 1,00,000இரண்டு இலக்கம் 15,000



- நமது நிருபர் -

மூலக்கதை