ரேஷனில் "ஸ்மார்ட்' கார்டு பயன்பாடு கண்டிப்பு:முறைகேடுகளை தடுக்க அதிரடி முடிவு

தினமலர்  தினமலர்
ரேஷனில் ஸ்மார்ட் கார்டு பயன்பாடு கண்டிப்பு:முறைகேடுகளை தடுக்க அதிரடி முடிவு

திருப்பூர்கார்டுதாரர்களுக்கு தெரியாமல், ரேஷன் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், "ஸ்மார்ட்' கார்டை "ஸ்கேன்' செய்து பொருட்கள் வழங்கும் நடைமுறை, அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு, "ஸ்மார்ட்' கார்டு வழங்கும் பணி, 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு மூலமாக மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஓராண்டாக, "பாயின்ட் ஆப் சேல்' கருவி மூலம் மட்டுமே, ரேஷன் பொருட்கள் கணக்கிட்டு வழங்கப்படுகின்றன.
பொருட்களுக்கான ரசீது எதுவும் வழங்கப்படுவதில்லை; பொருள் வாங்கியதும், கார்டுதாரரின் மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. குடோன்களில் இருந்து, ரேஷன் கடைக்கான பொருட்கள் அனுப்பிய நொடி முதல், பொருள் விற்பனை செய்யும் வரை, அனைத்து விவரங்களும், "பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவாகிறது.
ரேஷன் கடைகளில் இதுவரை, ரேஷன் கார்டு எண்ணை பதிவு செய்து, அதன்மூலமாக, கார்டுதாரர்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. கார்டுதாரர் கடைக்கு வராதபோதும், கார்டு எண்ணை பதிவு செய்து, விற்பனையாளரே பொருட்களை மற்றொரு நபருக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது பற்றி கார்டுதாரரின் மொபைல்போனுக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ்., சென்று விடுவதால், விற்பனையாளரின் நுட்பமான முறைகேடு வெளியே தெரிந்து விடுகிறது. பொருள் வாங்காமல், எஸ்.எம்.எஸ்., வருவதாக கார்டுதாரர் கேள்வி எழுப்பினால், "கை தவறி பதிவாகிவிட்டது' என்று சாக்குபோக்கு பதில் சொல்லி சமாளித்து விடுகின்றனர்.இந்த நூதன முறைகேட்டுக்கு, உணவு பாதுகாப்புத்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன்படி, "ஸ்மார்ட்' ரேஷன் கார்டை நேரில் எடுத்து வந்து, "க்யூ. ஆர்.,3 கோடு "ஸ்கேன்' செய்தால் மட்டுமே, ரேஷன் கடையில் இனி பொருட்கள் கிடைக்கும். இந்த புதிய உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அவ்வகையில், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், "ஸ்மார்ட்' கார்டு ஸ்கேன் செய்து, நேற்று பொருட்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு கடையிலும், கணிசமான அளவு கார்டுகள் "ஸ்கேன்' ஆகாததால், பொருட்கள் பெறமுடியவில்லை. ஸ்மார்ட் கார்டின் க்யூ.ஆர்., கோடு உள்ள பகுதி சேதமாகி இருந்த கார்டுகள், "பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவாகாததால், பலரும் நேற்று பொருட்கள் பெறமுடியாமல் திரும்பி சென்றனர்.கார்டு "ஸ்கேன்' ஆகாதபட்சத்தில், பொது "இ - சேவை' மையத்தில் புதிய கார்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, ரேஷன் கடை ஊழியர்கள் திரும்பி அனுப்பினர்.

மூலக்கதை