ஸ்கூட்டர் விண்ணப்ப தகவல் உண்மைதானா? விசாரித்தால் தெரியும் நிஜம்!

தினமலர்  தினமலர்
ஸ்கூட்டர் விண்ணப்ப தகவல் உண்மைதானா? விசாரித்தால் தெரியும் நிஜம்!

கோவை:'அம்மா' இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ், ஏராளமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், விண்ணப்பங்களின் உண்மை தன்மையை நேரில் கண்டறிய, சரியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால், தகுதி இல்லாதவர்கள் இத்திட்டத்தால் பலனடையவுள்ளனர். இதை தவிர்க்க, கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'அம்மா' இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம் முழுக்க, ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. அவற்றை தேர்வு செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சான்றிதழ்கள், இணைப்புகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், சரியாக இருக்கும் விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
அதே சமயம், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில், விண்ணப்பதாரர்கள் வசிக்கின்றனரா, அவர் பணிக்கு செல்கிறாரா அல்லது சுய தொழில் செய்கிறாரா, அவரது ஆண்டு வருவாய் சரிதானா என்பது குறித்து, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும், பணியாளர்கள்ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.சில உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள், களவிசாரணை மேற்கொள்ளாமல், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் போன் எண்களில் அழைத்து, தகவல்களை 'டிக்' செய்கின்றனர். இதனால் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களில் மாறுபாடு ஏற்படும்; பயனாளிகள் தேர்வில் தகுதியற்ற நபர் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும், விண்ணப்பதாரர்கள் பலர் கருதுகின்றனர்.
'சிலர், தவறான தகவல்களை அளித்துள்ளனர். நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே, உண்மை நிலவரம் தெரியவரும். இருந்த இடத்தில் இருந்தே, போனில் நடத்தும் ஆய்வின் வாயிலாக, தவறான நபர்கள் பலன் அடைவர். நிஜமாகவே தகுதியுள்ள பலர், விடுபட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, உண்மையாகவே கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் பெறப்பட்ட, 23,000 விண்ணப்பங்களும், பரிசீலனை செய்யப்படும்; கட்டாயம் களவிசாரணைக்கு உட்படுத்தப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்களின் அடிப்படையில், அதன் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும். கள ஆய்வு மேற்கொள்ளாத பணியாளர்கள் குறித்து, புகார்கள் வந்தால் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். ஊர்ஜிதம் செய்யப்பட்டால் அவர் மீது, கலெக்டர் உறுதியாக நடவடிக்கை மேற்கொள்வார். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை