ஈரான் விமான விபத்து: 66 பேர் உடல் சிதறி பலி

தினமலர்  தினமலர்
ஈரான் விமான விபத்து: 66 பேர் உடல் சிதறி பலி

தெஹ்ரான்: ஈரானில், பயணியர் விமானம் விபத்துக்குஉள்ளானதில், 66 பேர், உடல் சிதறி பலியாயினர்.மத்திய கிழக்கு நாடான ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து, யாசஜ் என்ற நகரத்திற்கு, நேற்று காலை, உள்ளூர் விமானம் புறப்பட்டது.அசீமன் என்ற தனியார் நிறுவனத்துக்குசொந்தமான, அந்த குட்டி விமானத்தில், 60 பயணியர், ஆறு விமான ஊழியர்கள் பயணம்செய்தனர். புறப்பட்ட, 50 நிமிடங்களுக்கு பின், கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.விமானம் பற்றிய தகவல் கிடைக்காமல், அதிகாரிகள் கவலை அடைந்தனர். ஈரானின் ஜாக்ராஸ் மலைப் பகுதியில் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து, ஜாக்ராஸ் மலையில் உள்ள தேனா மலைப் பகுதியில் மோதி, விமானம் விபத்துக்குள்ளானது தெரிந்தது. அதில் பயணம் செய்த, 66 பேரும், உடல் சிதறி இறந்தனர். பனிமூட்டம் காரணமாக, இந்த விபத்து நடந்ததாக, விமானநிறுவனம் தெரிவித்துள்ளது.விபத்து நடந்த மலைப் பகுதிக்கு, 'ஆம்புலன்ஸ்' செல்ல முடியாததால், ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டர் தரை இறங்க முடியவில்லை. இதையடுத்து, ஈரானின் பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த, 20 குழுக்கள், விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளன.'ஈரானில், புதிய விமானங்கள் வாங்குவதற்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதால், பயணியர் போக்குவரத்தில், பழைய விமானங்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. 'எனவே, நவீன தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்புஇல்லாத பயணியர் விமானங்களில் மக்கள்பயணிக்கின்றனர். இதனால், ஈரானில், பயணியர் விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது' என, அதிகாரிகள்தெரிவித்தனர்.

மூலக்கதை