”பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து மத்திய அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்!”- நாராயணசாமி வலியுறுத்தல்

விகடன்  விகடன்
”பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து மத்திய அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்!” நாராயணசாமி வலியுறுத்தல்

”பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ஊழல் குறித்து மத்திய அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்” புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ”பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நிரவ் மோடி 11,400 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வங்கிகளின் பல்வேறு கெடுபிடிகளைத் தாண்டியும் இந்த ஊழல் நடைபெற்றிருப்பது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய ஊழல் இது. மத்திய அரசு இது தொடர்பாக விசாரணையை உடனே நடத்தி உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேபோல இதில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்தால் அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன்.

கட்சி மேலிடம் கேட்டால் சித்தராமையாவை எதிர்ப்பதாகக் கூறுவேன். மாநிலத்தின் உரிமையைக் கேட்பேன். இரண்டு தினங்களுக்கு முன்பு அரசின் சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் பணிபுரியும் ஊழியர்கள் நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மாநிலத் தலைவர் சாமிநாதன் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தி, தரம் தாழ்ந்து பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தரம் தாழ்த்தி பேசியதற்கு அவர் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். சாமிநாதன் புதுச்சேரி மாநிலத் தலைவராக இருக்க தகுதியற்றவர்” என்றார்.

மூலக்கதை