மதுரையில் 21-ந் தேதி நடைபெறும் கட்சியின் தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தார் ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
மதுரையில் 21ந் தேதி நடைபெறும் கட்சியின் தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தார் ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங் கள் நிகழ்ந்து வருகின்றன.

நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்தனர். ஒரே சமயம் இருவரும் அரசியல் களத்தில் இறங்குவதால், இணைந்து செயல்படுவார்களா? அல்லது எதிரும், புதிருமாக மல்லுக்கட்டுவார்களா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆன்மிக அரசியலை ரஜினிகாந்தும், பகுத்தறிவு அரசியலை கமல்ஹாசனும் கையில் எடுத்து உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இறங்கியுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) மதுரையில் கட்சியின் பெயரை அறிவித்து, கொடியையும் அறிமுகம் செய்ய இருக்கிறார்.

அரசியலில் வேகம் காட்டிவரும் கமல்ஹாசன், ஏற்கனவே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சந்தித்த கமல்ஹாசன் நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து பேசினார்.

இதற்கிடையே, யாரும் எதிர்பாராத வகையில், நேற்று மதியம் 2.30 மணி அளவில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு கமல்ஹாசன் திடீரென காரில் சென்றார். அவரை வீட்டில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட இருவரும் சுமார் 15 நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அரசியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். பின்னர், மதுரையில் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள கட்சி தொடக்க விழாவில் பங்கேற்குமாறு ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். அதற் கான அழைப்பிதழையும் அவரிடம் வழங்கினார்.

அதன்பிறகு, மதியம் 2.45 மணி அளவில் ரஜினிகாந்திடம் விடைபெற்றுக்கொண்டு கமல்ஹாசன் புறப்பட்டார். அவரை வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பிய ரஜினிகாந்த், காரில் கமல்ஹாசன் ஏறியதும் கார் கதவை மூடியதுடன் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் வீட்டை விட்டு கார் வெளியே வந்தபோது, நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கமல்ஹாசனிடம் பேட்டி கேட்க முயன்றனர். உடனே, காரை விட்டு இறங்கி வந்த கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- எதற்காக இந்த சந்திப்பு?. ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற போகிறீர்களா?.

பதில்:- இல்லை. ஒரு முக்கியமான பயணத்தை என் வாழ்க்கையில் தொடங்க இருக்கிறேன். இந்த மாதிரி (அரசியல்) முடிவு எடுத்து இருக்கிறேன் என்று முதலில் அவரிடம் வந்து சொன்னேன். இப்போது பயணத்துக்கு புறப்படும்போதும் எனக்கு பிடித்த ஆட்களிடம் சொல்லிவிட்டு புறப்படுகிறேன்.

கேள்வி:- உங்களுடைய கட்சி தொடக்க விழா கூட்டத்தில் கலந்துகொள்ள ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தீர்களா?

பதில்:- அதுவும் சொல்லி இருக்கிறேன்.

கேள்வி:- உங்கள் அழைப்புக்கு ரஜினிகாந்த் என்ன சொன்னார்?

பதில்:- அதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். வற்புறுத்தக்கூடாது.

கேள்வி:- உங்களுடைய கருத்துக்கும், ரஜினிகாந்த் கருத்துக்கும் வேறுபாடு உள்ள நிலையில் இந்த சந்திப்பு என்ன மாதிரியானது?.

பதில்:- சந்திக்கிறது நட்பு. கருத்து என்னுடையது.

கேள்வி:- ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து நீங்கள் பேசினீர்களா?

பதில்:- இல்லை.

கேள்வி:- இது நட்பு ரீதியான சந்திப்பா? அல்லது அரசியல் ரீதியான சந்திப்பா?

பதில்:- நட்பு ரீதியான சந்திப்பு, அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல. இதில் நட்பு தான் பிரதான விஷயம்.

கேள்வி:- ரஜினிகாந்த் உங்களிடம் என்ன சொன்னார்?

பதில்:- ‘நல்வாழ்த்துகள்’ என்றார்.

கேள்வி:- நீங்கள் அடுத்து யாரை சந்திக்க போகிறீர்கள்?

பதில்:- அதை தற்போது சொல்ல முடியாது.

கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதியை நீங்கள் சந்திப்பதற்கு, மு.க.ஸ்டாலின் நேரம் ஒதுக்கித்தரவில்லை என்று கூறப்படுகிறதே?.

பதில்:- அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. அது தவறு.

கேள்வி:- தேசிய அளவிலான தலைவர்களை நீங்கள் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- சந்திக்க வாய்ப்பு வரலாம்.

கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதியை எப்போது சந்திப்பீர்கள்?

பதில்:- அவர்கள் (தி.மு.க. தரப்பு) சொல்ல வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

அதன்பிறகு, அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்ற கமல்ஹாசன் அங்கு கூடியிருந்த நிருபர்களுக்கும் பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்களும், ரஜினிகாந்தும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நடு நிலையாளர்கள் விரும்புகிற சமயத்தில் உங்களுடைய சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளதே?

பதில்:- நானும், ரஜினி காந்தும் சந்திப்பது இப்போது வேண்டும் என்றால் புதிதாக இருக்கலாம். இரண்டு வீடுகளில் எந்த முக்கியமான விஷயங்கள் நடந்தாலும் சொல்லிக்கொள்வது வழக்கம். 40 ஆண்டு கால நட்பு. அதன் தொடர்ச்சிதான் இது.

கேள்வி:- நீங்களும், ரஜினிகாந்தும் இணைந்து அரசியலில் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?

பதில்:- வரும்போது பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர்களாக இருந்தபோது ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டாலும், அரசியலில் கால்பதித்த பிறகு மலேசியாவில் தான் முதன் முதலில் சந்தித்துக்கொண்டனர். கடந்த மாதம் 6, 7-ந் தேதிகளில் அங்கு நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்ற இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர். ஆனால், சென்னையில் இருவரும் சந்தித்துக்கொண்டது இதுதான் முதல் முறை.

நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நேற்று சந்தித்து பேசிக்கொண்டது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை