7½ கோடி மக்களை நம்பித்தான் அரசியல் களத்தில் குதிக்கிறேன் கமல்ஹாசன் சிறப்பு பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
7½ கோடி மக்களை நம்பித்தான் அரசியல் களத்தில் குதிக்கிறேன் கமல்ஹாசன் சிறப்பு பேட்டி

7½ கோடி மக்களை நம்பித்தான் அரசியல் களத்தில் குதிப்பதாக நடிகர் கமல்ஹாசன் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன்  நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கிராமங்கள் தத்தெடுப்பு

கேள்வி:– ஒரு மாவட்டத்துக்கு ஒரு கிராமத்தை தத்து எடுப்பதாக கூறியிருக்கிறீர்கள். அந்த கிராமத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்படும்?, அதற்கான நிதி ஆதாரம் என்ன?. இந்த வசதிகளை எல்லாம் யார் முன்னெடுத்து செய்வார்கள்?

பதில்:– இந்த கிராமங்களை தத்தெடுக்கும் செயல்பாடுகளில் பல என்.ஜி.ஓ.க்கள் ஈடுபட்டு செய்து வருகிறார்கள். அதை நாங்கள் செய்துகாட்ட வேண்டியது என்றால், ஒரு 8 கிராமங்களை மனதில் கொண்டுள்ளோம். அந்த கிராமங்களில் என்னென்ன வசதிகள் இல்லையோ, என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதை ஏற்படுத்தி தரவேண்டும். இதை அரசு செய்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசு தவறிவிட்டது. இந்த கிராமங்கள் திடீரென்று கவனிக்காமல் விடப்பட்டவை அல்ல. பல வருடங்களாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கிராமங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அதில் மேற்கொள்ளும் பணிகளில் அனைவரும் பங்களிக்க வேண்டும். இது மக்களின் பணி. மக்களும் சேர்ந்து செய்ய வேண்டும். ஏற்பாடுகளை நிச்சயம் நாங்கள் செய்து தருவோம். தூண்டில் கொடுக்கலாம், ஆனால் மீன்பிடிக்க வேண்டியது மக்கள் தான்.
விஞ்ஞானியுடன் சந்திப்பு

இது தொடர்பாக கே.ஆர்.ஸ்ரீதர் எனும் விஞ்ஞானியை சந்தித்து பேசினேன். இந்த கிராமங்களில் அரசும் மின்சார வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றால் அங்குள்ள மக்கள் என்னதான் செய்வார்கள்? அதற்கு மின்சாரத்தை தனியாக நாமே உற்பத்தி செய்ய முடியுமா? இது தொடர்பாகத்தான் அவரிடம் நான் பேசினேன்.

அதில் செய்யக்கூடியது என்ன? நமக்கு அப்பாற்பட்டது என்ன? என்று ஆராயப்பட்டு வருகிறது. பலர் எங்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். ஏற்கனவே பல கிராமங்களை தத்தெடுத்து செழிக்க வைத்தவர்கள் இன்று எங்களுடன் கைகோர்த்து இருக்கிறார்கள்.
‘ஸ்மார்ட் வில்லேஜ்’

கேள்வி:– உங்கள் கிராமங்கள் தத்தெடுக்கப்படவில்லை, இது ‘நிலைத்திருக்கும் கிராமம்’ என்று அனைத்து இடங்களிலும் கூறிவருகிறீர்களே?

பதில்:– நிலைத்திருப்பது என்பது, இது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அதுவே தன்னைத்தானே காத்துக்கொள்ளும் திறனும், சூழலும் கிராமத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். நான் மட்டும் சென்று ஒரு மந்திரக்கோலை ஆட்டி செய்யக்கூடியது அல்ல. அந்த மாதிரி செயல் அல்ல. ‘5 நிமிடத்தில் உங்கள் காயம் மறைந்துவிடும்’ என்று மருந்துகள் விற்கிறார்களே அதுபோல அல்ல. இது மக்கள் கூடி செய்யும் வி‌ஷயம்.

இந்த தேரை இழுப்பதற்கு ஒரு தலைவன் போதாது, பல்லாயிரம் தலைவர்கள் வேண்டும். இது சமூக தேர். இதை இழுப்பதற்கு மக்கள் வேண்டும். அந்தந்த ஊரில் இருக்கும் மக்கள் இது தன் வீட்டு கல்யாணம் என்று நினைத்து இதனை செய்யவேண்டும். அவர்கள் செய்வார்கள் என்று நம்பிக்கை இருப்பதாக ஆய்வு செய்த எங்கள் குழுவினர் எங்களிடம் கூறும்போது, அந்த குதூகலம் எங்களை வியப்படைய வைத்திருக்கிறது.

மக்களின் சிந்தனை எங்களை ஆச்சரியப்படவும், ஆனந்தப்படவும் வைத்திருக்கிறது. ‘நிலைத்திருக்கும் கிராமம்’ என்பது தன்னைத்தானே காத்துக்கொள்ளும் திறன் அந்த கிராமங்களுக்கு வரவேண்டும் என்பது தான் என் ஆசை. நாட்டின் மையங்களாக கிராமங்கள் மாறவேண்டும் என்பது தான் என் ஆசை. ‘ஸ்மார்ட் சிட்டி’ என்கிறார்கள். ஆனால் எனக்கு ‘ஸ்மார்ட் வில்லேஜ்’ வேண்டும்.
அஸ்திவாரத்தை பலப்படுத்தும் முயற்சி

கேள்வி:– உங்கள் கட்சியின் கட்டமைப்புகள், அதாவது கிராம அளவில் இருந்து எப்படி இருக்கும்?.

பதில்:– அதற்கான ஆரம்பம் இதுவென்றே வைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே எனக்கு கிராமத்தில் சிறிய கட்டமைப்பு நற்பணி இயக்கங்கள் மூலம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை இன்னமும், அதாவது அஸ்திவாரத்தை பலப்படுத்தும் முயற்சி தான் இது. பல கிராமங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. அடித்தளத்தில் இருந்து வரும் குரல்கள் எங்கள் செவியை எட்டியாக வேண்டும் என்ற ரீதியில் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.
7½ கோடி மக்களை நம்பி...

கேள்வி:– உங்கள் ரசிகர்களை நம்பி அரசியல் களத்தில் குதிக்கிறீர்களா?, பொதுமக்களை நம்பியா?.

பதில்:– இது மக்களுக்காக செய்யும் பணி. இதில் மக்கள் இல்லாமல் ஒரு சிறிய குழுவை வைத்துக்கொண்டு செய்ய முடியாது. இதில் மக்கள் தான் சம்பந்தப்பட வேண்டும். நான் 7½ கோடி மக்களை நம்பி இருக்கிறேன்.

கேள்வி:– ‘எனது உண்மையான நோக்கம் சாதாரண நிலையில் உள்ள தமிழகத்தை மாற்றிக்காட்டுவதே ஆகும்’, என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த பணியில் உங்கள் முதல் முயற்சி எது?.

பதில்:– எங்கள் அடிநாதம் என்னவென்பதை ‘நாளை நமதே’ கோ‌ஷங்களில் ஒன்றாகவே இணைத்திருக்கிறோம். ‘கிராமியமே நம் தேசியம் என்றால் நாளை நமதே’, என்பதே அது. இதுதான் எங்கள் முக்கியமான ஆரம்பகட்ட மையப்புள்ளி. இது ஒரே ஒரு கூட்டத்தை மட்டும் குறிவைக்கும் ஒரு வி‌ஷயம் அல்ல. ஏனென்றால் தமிழகம் என்பது திறமையான பல விஞ்ஞானிகளை கொண்டது. அப்துல்கலாமும் இருப்பார், விவசாயியும் இருப்பார், ஆழ்வாரும் இருப்பார், இப்படி பல தரப்பட்ட கலைஞர்களும், அவர்களின் திறமைகளும் இருக்கக்கூடிய ஊரில் அனைத்தையுமே கவனிக்க வேண்டும். மாணவர்களை கவனிக்க வேண்டும், விவசாயிகளை கவனிக்க வேண்டும். அதையெல்லாம் செய்ய வேண்டும். ஆரம்ப வேலைகளை செய்ய முயற்சி எடுக்கப்போகிறோம். நாங்கள் செய்வது முதலுதவி தான். உரிய சிகிச்சைகள் என்பது வெகுநாள் வேலை.
கட்சி கொள்கை

கேள்வி:– இப்போது திராவிட கட்சிகளுக்கு என தனியாக கொள்கைகள் இருக்கின்றன. தேசிய கட்சிகளுக்கு என தனியாக கொள்கைகள் இருக்கின்றன. உங்கள் கட்சி கொள்கை எந்த வகையில் வித்தியாசமாக இருக்கும்?

பதில்:– என்னை எல்லோருமே கேட்கும் கேள்வி, நீங்கள் இடதுசாரியா? வலதுசாரியா? ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தை பார்த்தால் நீங்கள் இடதுசாரி போன்று இருக்கிறது. ‘தசாவதாரம்’ படத்தை பார்த்தால் வலதுசாரி போன்று இருக்கிறது என்கிறார்கள். இந்த சார்பு, தராசுக்கு இருக்கக்கூடாது. நான் தராசுக்கு நடுவில் இருக்கும் முள் மாதிரி. அதுதான் மையம் என்று எனது ‘ஆப்’புக்கு(செயலிக்கு) பெயர் வைப்பதுக்கு மையம் என்ற வார்த்தை என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டு இருக்கிறது பல வருடங்களாக. அதற்கு காரணம் மையத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

அதாவது பகுத்தறிவது என்றால் என்ன? நீங்கள் எங்கள் பக்தர்களை எல்லாம் மதிக்கமாட்டீர்கள் என கேட்கிறார்கள். உங்களுக்கு ஏன் பக்தி இருக்கிறது. ஏன் காதலாகி கண்ணீர் மல்கி இப்படி பக்தியில் திளைக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்வது பகுத்தறிவு தான். நான் செய்கிறேனா? இல்லையா? என்பது முக்கியம் அல்ல நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு, உங்களை தடுப்பது கூட என் வேலை அல்ல. ஏன் செய்கிறீர்கள் என்பதை புரிந்துகொண்டாலே பாதி மானுடம் பிறந்துவிட்டது.
விஜயகாந்த்

கேள்வி:– ‘சினிமாவில் தான் ரஜினியும், கமலும் என்னைவிட சீனியர்கள். அரசியலில் அவர்கள் எனக்கு ஜூனியர் தான்’ என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:– உண்மையான ஒரு வி‌ஷயமாகத்தான் பார்க்கிறேன். அவர் எங்களுக்கு முன்னாடி வந்தவர், முன்னோடி. அவர் சொன்னதில் எந்த தப்பும் கிடையாது. நான் வந்து பேசிக்கிட்டு இருக்கிறேன் என்பது வேறு. வருவது யார்? ரஜினியும் பேசிக்கிட்டு இருக்கிறார். நானும் பேசிக்கிட்டு இருக்கிறேன். நான் ஒருமாதிரி பேசிக்கிட்டு இருக்கிறேன். நான் வந்துருவேன் என்று அவர் சொல்லிக்கிட்டு இருந்தாரு. இவர் முதலில் வந்தே காட்டிவிட்டார். எங்களுக்கு முன்னோடி தான் அவர்(விஜயகாந்த்).

கேள்வி:– எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தன்னுடைய 65 வயதில் தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன் அரசியலில் வெற்றி பெற முடியவில்லையே? தற்போது நீங்களும், ரஜினிகாந்தும் அரசியலில் களம் இறங்குகிறீர்கள். யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறீர்கள்?

பதில்:– மக்களுக்கு.
ஓட்டுக்கு நோட்டு

கேள்வி:– ஆன்மிக அரசியலை முன்னெடுத்து ரஜினிகாந்த் களம் இறங்குகிறார். நீங்கள் பகுத்தறிவு கருத்துகளை முன்னெடுத்து அரசியல் களம் இறங்குகிறீர்கள். இதில் எதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறீர்கள்?

பதில்:– மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது நல்ல அரசை.

கேள்வி:– ‘ஓட்டுக்கு நோட்டு’ என்று அரசியல் சூழ்நிலை மாறி வரும் நிலையில், இதுபோன்ற தருணத்தில் அரசியலில் எப்படி தாக்குப்பிடிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:– ஒரே ஒரு வி‌ஷயம் சொல்கிறேன். 6 ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டை விற்கிறேன். 5 ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டை விற்கிறேன் என்று தன்னுடைய பொருளின் விலை தெரியாமல் அடிமாட்டு விலைக்கு விற்கிறீர்கள் என்பது தான் என்னுடைய கருத்து. நீங்கள் விற்க வேண்டிய அவசியமே இல்லை அதை நீங்கள் பணமாக்க முடியும். 6 ஆயிரத்தை 5 வருடத்தால் வகுத்தால் 1½ ரூபாயோ? 99 பைசாவோ? வரும் ஆனால் நல்ல அரசு ஒட்டு போட்டு நீங்கள் கொண்டுவந்தால் அந்த 5 வருடத்தில் நீங்கள் 15 லட்சம் ரூபாய் கூட சம்பாதிக்கலாம். அதை கோட்டைவிட்டுவிட்டு, தண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல், வேலை இல்லாமல் அதையெல்லாம் மறப்பதுக்கு டாஸ்மாக் மட்டும் வச்சிக்கிட்டு, கட்டிக்கிட்டு அழுதுகிட்டு இருக்கிறீர்கள்.
திருட்டு, கையாடல்

கேள்வி:– தமிழகத்தின் நிர்வாகம் சரியில்லை என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ரூ.4 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால், நிதி நிர்வாகத்தை சீர்படுத்தவும், இவ்வளவு பெரிய கடன் தொகையை அடைக்கவும் எந்த வகையிலான வழிமுறைகளை பின்பற்றுவீர்கள்?

பதில்:– தொழில் துறையை வளப்படுத்த வேண்டும். அதை வளப்படுத்திவிட்டால் அவர்களின் பங்களிப்பு இருக்கும். மக்களுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அது ஒரு பங்களிப்பை கொடுக்கும். லஞ்சம் வாங்குவதை கணிசமாக குறைத்தால், இந்த கடன் எல்லாம் வந்ததுக்கு காரணம் நிதி பற்றாக்குறை வந்ததுக்கு காரணம், ஆட்சி முறையில் வந்த பிழைகள் மட்டும் அல்ல திருட்டு, கையாடல் இதனாலும் நடந்திருக்கிறது. இது மூன்றையும் பண்ணிப்பார்த்தால் கடன் அடையும். ஆனால், இது பல வருடங்களாக ஏற்படுத்திய கடன் 15 லட்சத்து 850 கோடி ரூபாய் என்பது தான் சரியான கணக்கு. ஆக, ரூ.4 லட்சம் கோடியை அடைத்துவிடலாம். ரூ.15 லட்சம் கோடி என்பது சறுக்கு பாறை. ஆனால் அதையும் ஏறுவான் தமிழன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நான் கனியல்ல; விதை

கேள்வி:– அரசியலில் வித்தியாசமானவராக இருக்க விரும்புவதாக, நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். அந்த வி‌ஷயத்தை எப்படி எதிர்பார்க்கலாம்?

பதில்:– மேற்சொன்ன பதில்களில் இருந்தே உங்களுக்கு புரிந்து இருக்கும், வித்தியாசம் என்னவென்று. இன்னும் அதிகம் சரக்கு இருக்கிறது இங்கே.

கேள்வி:– பொதுவாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் தலைவர்கள் பொதுமக்களுக்கு எட்டாக்கனியாக, பொதுமக்களிடம் இருந்து தூரத்தில் இருக்கிறார்கள். சாதாரண பாமர மக்களும் சந்திக்க முடியும் அளவில் உங்கள் அணுகுமுறை இருக்குமா?

பதில்:– நடிகர்கள் கனி என்கிறீர்கள். நான் விதையாக நினைக்கிறேன். தரையில் தான் என்னை புதைக்க முடியும் கிளையில் இருக்க மாட்டேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

மூலக்கதை