”ரிசர்வ் வங்கி என்ன செய்து கொண்டிருந்தது?”- பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தில் கேள்வி எழுப்பும் இ.கம்யூனிஸ்ட்

விகடன்  விகடன்
”ரிசர்வ் வங்கி என்ன செய்து கொண்டிருந்தது?” பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தில் கேள்வி எழுப்பும் இ.கம்யூனிஸ்ட்

“பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டார்.  கூட்டத்தில் புதுச்சேரி மாநில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக சலீம், துணைச் செயலாளர்களாக அபிஷேகம், கீதநாதன், பொருளாளராக சுப்பையா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்யபட்டனர். டி.ராஜா அந்தப் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ஊழல் குறித்து பிரதமரும், நிதித்துறை அமைச்சரும் மௌனம் காப்பது ஏன்? பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த மிகப்பெரிய ஊழல் எப்படி நடைபெற்றது? இவ்வளவு பெரிய ஊழல் நடைபெறும் வரை ரிசர்வ் வங்கி என்ன செய்தது? நிதித்துறை என்ன செய்தது? இந்த முறைகேடு குறித்து உடனே சி.பி.ஐ விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும். பாராளுமன்றத்தில் நிதிநிலை குறித்து விவாதிக்கும்போது இந்த பிரச்னை பெரிய அளவில் எழும்பும். மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்காதது குறித்து புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடி விளக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசால் புதுச்சேரி மாநிலம் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஆளுநர் கிரண்பேடி மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். பாராளுமன்றத்திலும் இதுகுறித்துப் பேசி வருகிறோம். கிரண்பேடி எதேச்சதிகாரத்த்தோடு செயல்படக்கூடாது”  என்று தெரிவித்தார்.

மூலக்கதை