7,500 ரூபாய்க்கு ஏலம் போன ஒற்றை எலுமிச்சை பழம்!

விகடன்  விகடன்
7,500 ரூபாய்க்கு ஏலம் போன ஒற்றை எலுமிச்சை பழம்!

ஈரோட்டை அடுத்த விளக்கேத்தி புது அண்ணாமலை பாளையத்தில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர் சித்தர் கோவிலில் ஒரே ஒரு எலுமிச்சை பழம் 7,500 ரூபாய்க்கு ஏலம் போனது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா விளக்கேத்தி புது அண்ணாமலை பாளையத்தில் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற ‘பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர் சித்தர்’ கோவில் உள்ளது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பழமையான இக்கோவில், சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலம். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள், குடும்பப் பிரச்னையில் இருப்பவர்கள் இந்தக் கோவிலில் வந்து பழங்களை வைத்து நேர்த்திக்கடன் செய்தால் பிரச்சினைகள் தீர்ந்துபோகும் என்பது ஐதீகம். அதேபோல, ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து அவர்களுடைய ஜாதகத்தை சாமியிடம் வைத்து பூஜை செய்தால் அந்தக் கண்டம் தீர்ந்து போகுமாம்.

மேலும், இந்தக் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். அதையொட்டி அடுத்தநாள் கடவுளுக்கு அணிவித்த பொருட்களை ஏலம் விடும் நிகழ்வு நடைபெறும். அதாவது சாமிக்கு அணிவித்த வெள்ளி நெற்றிக் காசு, வெள்ளி மோதிரம், சாமி கையில் இருந்த எலுமிச்சை பழம் ஆகியவை ஏலம் விடப்படும். அந்தவகையில், இந்த வருடம் நடைபெற்ற ஏலத்தில் சாமி கையில் இருந்த ஒரே ஒரு எலுமிச்சை பழம் மட்டும் 7,500 ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. மேலும், சாமி சிலையின் நெற்றியில் அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளிக் காசு 12 ஆயிரம் ரூபாய்க்கும், சாமி சிலையின் கையில் அணிவிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் 17,600 ரூபாய்க்கும் ஏலம் போயிருக்கிறது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் போது ஒரு எலுமிச்சை பழம் 3500 ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. சாமியின் கரங்களில் இருந்த எழுமிச்சைப் பழத்தை ஏலத்தில் வாங்கி அதனை  வீட்டில் வைத்தால் அந்த வீடு சுபிக்‌ஷமடைந்து செல்வம் பெருகும் என அப்பகுதிவாசிகள் நம்புகின்றனர். 7,500 ரூபாய் அல்ல 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏலம் சென்றாலும் அதனை வாங்குவதற்கு அப்பகுதி மக்கள் தயாராக இருக்கிறார்களாம்.

மூலக்கதை