இந்திய வம்சாவளி ஆசிரியைக்கு அமெரிக்காவில் பாராட்டு மழை

தினமலர்  தினமலர்
இந்திய வம்சாவளி ஆசிரியைக்கு அமெரிக்காவில் பாராட்டு மழை

நியூயார்க்: அமெரிக்காவில், புளோரிடா நகர பள்ளியில், முன்னாள் மாணவன், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு, 17 பேரை கொன்றபோது, தன் வகுப்பு மாணவர்களை சாமர்த்தியமாக பாதுகாத்த இந்திய வம்சாவளி ஆசிரியைக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் உள்ள ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில், சமீபத்தில் துப்பாக்கியுடன் புகுந்த, முன்னாள் மாணவன், சரமாரியாக சுட்டதில், 17 பேர்
உயிரிழந்தனர்.துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது, பள்ளியில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. அப்பள்ளியில், கணித ஆசிரியையாக பணியாற்றும், இந்திய வம்சாவளி பெண், சாந்தி விஸ்வநாதன், எச்சரிக்கை மணி ஒலியை கேட்டதும், மின்னல் வேகத்தில் செயல்பட்டார்.
வகுப்பறை கதவு, ஜன்னல்களை வேகமாக மூடினார்; பின், மாணவ - மாணவியரை, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் கண்ணில் படாத வகையில், மறைந்து, ஒதுங்கி நிற்கும்படி செய்தார், சாந்தி.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார், வகுப்பறை கதவை திறக்கும்படி, குரல் கொடுத்தனர். ஆனால், அது, துப்பாக்கியுடன் வந்த நபராக இருக்கும் என சந்தேகித்த சாந்தி, கதவை திறக்க மறுத்து
விட்டார்.
இதையடுத்து, போலீஸ்காரர்களில் ஒருவர், ஜன்னலை உடைத்து உள்ளே சென்று, மாணவர்களையும், ஆசிரியை சாந்தியையும் வெளியே பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.
சாந்தி விஸ்வநாதனின் துணிச்சலான, சாமர்த்தியமான செயலால், அவர் வகுப்பு மாணவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர். இதனால், அவருக்கு, மாணவர்களின் பெற்றோர், உறவினர், நண்பர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

மூலக்கதை