புளோரிடா துப்பாக்கிச்சூட்டில் மாணவர்களின் உயிரை காத்த இந்திய ஆசிரியை

தினமலர்  தினமலர்
புளோரிடா துப்பாக்கிச்சூட்டில் மாணவர்களின் உயிரை காத்த இந்திய ஆசிரியை

நியூயார்க் : புளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூட்டின் போது, அங்கு பணிபுரிந்த இந்திய ஆசிரியை ஒருவர் தனது வகுப்பு மாணவர்களின் உயிர்களை சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றி உள்ளார்.

புளோரிடா மாகாணத்தின் பார்க்லேண்ட் பகுதியில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த முன்னாள் மாணவர் ஒருவர், தீ அபாய மணியை ஒலிக்கச் செய்துள்ளார். அப்போது சிதறி ஓடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தின் போது கணித ஆசிரியையான சாந்தி விஸ்வநாதன், மாணவர்களுக்கு அபாகஸ் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது 2வது முறையாக தீ அபாய மணி ஒலித்த போது சூழ்நிலையை புரிந்து கொண்ட அவர், வகுப்பின் கதவுகளை பூட்டியதுடன், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாத வகையில் ஜன்னல்களை பேப்பர்களை கொண்டு அடைத்துள்ளார். வகுப்பு மாணவர்களையும் மூலையில் அமரும்படி கூறி உள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்து பிறகு, வகுப்பறையின் கதவை தட்டிய போதும் அவர் திறக்க மறுத்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தான் பாதுகாப்பு படையினர் போல் பேசுவதாக எண்ணிய சாந்தி, "முடிந்தால் கதவை உடையுங்கள். இல்லாவிட்டால் சாவியை எடுத்து வந்து கதவை திறந்து கொள்ளுங்கள்" என கூறி உள்ளார். சாதுர்யமாக செயல்பட்டு பல மாணவர்களின் உயிரை காப்பாற்றிய இந்திய ஆசிரியை சாந்தி விஸ்வநாதனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மூலக்கதை