177.25 டி.எம்.சி. தண்ணீரை கொண்டு வருவதில் முனைப்பு காட்டுவோம் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
177.25 டி.எம்.சி. தண்ணீரை கொண்டு வருவதில் முனைப்பு காட்டுவோம் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது:-

முனைப்புடன் செயல்படும்

தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் காவிரி நீரை எவ்வாறு பங்கிட வேண்டும்? என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின் முழு விவரங்களும், அதில் உள்ள ஷரத்துகளும் அரசுக்கு வந்தபின்னரே எங்களுடைய முழுமையான கருத்துகளை கூற முடியும்.

எனினும் இந்த தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழக மக்களுக்கும், விவசாய பெருங்குடி மக்களுக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் கொண்டு வந்து சேர்ப்பதில் அரசு முனைப்புடன் செயல்படும். அதை பெறுவதன் முலம் தமிழக மக்களின் எண்ணங்களை, உரிமைகளை நிறைவேற்றுகின்ற அரசாக தமிழக அரசு இருக்கும்.

ஜெயலலிதா போராட்டம்

காவிரி நடுவர் மன்றத்தில் 17 ஆண்டுகள் விசாரணை முடிந்து கடந்த 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின் படி நீரை பெறவேண்டும் என்றால் இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடவேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தினார். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

இறுதியில் உச்சநீதிமன்றத்தை நாடி, சட்டப்போராட்டத்தை நடத்தி தான் காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார் ஜெயலலிதா. காவிரி நீரை பெறுவதில் ஜெயலலிதா மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளை எண்ணிப்பார்க்க வேண்டும். காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய உரிமைகளை சட்டத்தின் மூலம் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார் அவர்.

தி.மு.க. பெற்று தரவில்லை

அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக சுப்ரீம் கோர்ட்டில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த தீர்ப்பில் வழங்கப்பட்டு உள்ள சாதக பாதகங்களை அறிந்து அரசின் சார்பில் அறிக்கையாக தரப்படும்.

தி.மு.க. எந்த காலத்திலும் காவிரி நீரை பெற்று தரவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு தான் 2007-ல் வழங்கப்பட்டது. அப்போது மத்திய-மாநிலத்தில் ஆட்சியில் இருந்தும் அந்த தீர்ப்பை அரசாணையாக தி.மு.க. பெற்றுத்தரவில்லை.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மூலக்கதை