காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

PARIS TAMIL  PARIS TAMIL
காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. காவிரி தண்ணீரின் அளவு தற்போது 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி நடுவர்மன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பையும், இறுதி தீர்ப்பையும், காவிரி நீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் அவ்வப்போது பிறப்பித்த உத்தரவுகளையும் இதுவரை மதிக்காத கர்நாடக மாநிலத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டதைவிட கூடுதலாக 14.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து இருக்கிறது.

எனவே, புவியியல் மற்றும் சரித்திர ரீதியாக தமிழகத்திற்கே உரித்தான காவிரி நீரைப் பெறுவதற்கான, நியாயமான ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் போதிய அளவில் முன்வைக்க தவறிய அ.தி.மு.க. அரசுக்கு தி.மு.க. சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்டவற்றின் உத்தரவுகளை மட்டுமல்ல முதல்-அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளையும் அலட்சியப்படுத்திவரும் கர்நாடக மாநிலத்திற்கு இப்படியொரு நிவாரணம் கிடைத்திருப்பது நடுநிலையாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் அதை நிறைவேற்ற மறுத்த மத்திய பா.ஜ.க. அரசும், காவிரி இறுதி வழக்கு விசாரணையில் கருகிக்கிடக்கும் பயிர்களையும், காய்ந்துகிடக்கும் வயல்களையும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுபோகாமல் தவறவிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும் தமிழகத்திற்கும், தமிழக விவசாயிகளுக்கும் மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கிவிட்டன.

காவிரி நதிநீர் பிரச்சினையில் கருணாநிதி தமிழகத்திற்கு பெற்றுத்தந்த உரிமைகளை அ.தி.மு.க. அரசு இன்றைக்கு பறிகொடுத்துவிட்டது. ஆகவே, தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைக்கு உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும். அந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- காவிரி பிரச்சினை தொடர்பாக தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த அழைப்புவிடுக்கப்படுமா?

பதில்:- அரசு தான் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். நாங்கள் எத்தனையோ பிரச்சினைகளுக்காக இதற்கு முன்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தியிருக்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் கூட்டினால் பயன் இருக்குமா அல்லது நாங்கள் அழைத்தால் அ.தி.மு.க. அந்த கூட்டத்தில் பங்கேற்குமா?

கேள்வி:- காவிரி விவகாரத்தில் தி.மு.க. தான் தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்தது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளாரே?

பதில்:- எத்தனையோ பிரச்சினைகள் தமிழ்நாட்டை சூழ்ந்துள்ளது. ஒரு அனைத்து கட்சி கூட்டம் நடத்தக்கூட இந்த ஆட்சிக்கு யோக்கியதை இல்லை. அதுமட்டுமல்ல, பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் இதே கருத்தை தெரிவித்து இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபடவில்லை. எனவே, துரோகம் இழைத்தது யார் என்பது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

மூலக்கதை