தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

நீலகிரி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று நடந்தது. அப்போது ரஜினிகாந்தின் வீடியோ உரையை திரையில் வெளியிட்டனர். அதில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

“தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது நம் எல்லோருடைய நோக்கம். நாம் ஒற்றுமையாக, ஒழுக்கமாக, கட்டுப்பாடாக இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

நம் இதயத்தை, எண்ணங் களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது ஒரு பொதுநலம். சுயநலம் கிடையாது. இந்த பொதுநலத்துக்கு முக்கியமாக இருப்பது நாம் எதையும் எதிர்பார்க்காமல், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அது மட்டும் தான் நோக்கமாக இருக்க வேண்டும்.

அரசியல் மாற்றம்

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாடு இப்படியா? என்று வியந்து பார்க்கும் அளவுக்கு சாதித்து காட்ட வேண்டும். ஆண்டவன் நமக்கு கொடுத்து இருக்கிற வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

நான் எப்போதும் உங்களுக்கு சொல்கிற மாதிரி, உங்கள் குடும்பம், தாய்-தந்தையர் முக்கியம். அந்த கடமையை சரியாக செய்ய வேண்டும். அவர்களை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மற்றதெல்லாம். அவர்களை விட்டுவிட்டு இங்கு வாருங்கள் என்று சத்தியமாக சொல்ல மாட்டேன்.

அரசியல், பொதுநலனுக்கு வருகிறபோது பதவி, புகழ் கிடைக்கவில்லை என்று யாரும் வருத்தப்படக்கூடாது. எல்லாம் ஒரு நல்ல காரியத்துக்காக வருகிறோம். தலைமை எல்லாவற்றையும் மிக கவனமாக பார்த்து சரியான முடிவை எடுக்கும். பதவி என்பதை பெரிதாக நினைத்து விடக்கூடாது. இன்னும் அதிகமாக பொறுப்பு இருக்கும் அவ்வளவு தான். அதுமட்டும் தான் மனதில் இருக்கணும்.

சண்டை வராதா?

நமக்குள் எதாவது சண்டை வருதா? மனஸ்தாபம் வருதா? என்று எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக் கக்கூடாது. எல்லோரும் நல்ல மனதோடு, நல்ல எண்ணத்தோடு சேர்ந்து, ஆண்டவனை வேண்டி இந்த காரியத்தில் இறங்கி இருக்கிறோம்.

எல்லோரும் ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் திரும்பவும் சொல்கிறேன், உழைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு இதை மட்டும் நீங்கள் காட்டிவிட்டீர்கள் என்றால், மிச்சதை ஆண்டவன் இருக்கான், நான் இருக்கேன் பார்த்துக்கொள்வோம்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

மூலக்கதை