தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழகம்கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. கடந்த காலங்களில் காவிரி நதிநீர் பிரச்சினையில் தீர்ப்பு வந்தபோது கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டன. 2016-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த வன்முறையில் தமிழகத்தைச் சேர்ந்த 40 ஆம்னி பஸ்கள் கொளுத்தப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்.

இதனால் இந்த முறை இரு மாநிலத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடக்கூடாது என்று போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் 800-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நிறுத்தப்பட்டன.

அதேபோல தமிழகத்துக்கு வரும் 500-க்கும் மேற்பட்ட கர்நாடக அரசு பஸ்களும் நேற்று முன்தினம் இரவு முதல் நிறுத்தப்பட்டன. பஸ்கள் திடீரென்று நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அதே நேரத்தில் மற்ற வாகனங்கள் சென்றன. ஓசூர் அருகே இரு மாநில எல்லையில் நேற்று காலை முதல் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

தீர்ப்பு நேற்று காலை வெளியானதும் இருமாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து வாகனங்களும் எல்லையில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார்கள்.

தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் கன்னட ஜாக்குருதி வேதிகே அமைப்பினர் அவர்கள் எல்லையில் இனிப்புகளை வழங்கினார்கள். எல்லையில் அமைதி திரும்பிய பிறகு போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோல கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை பகுதியிலும் தமிழக அரசு பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சத்தியமங்கலம் தாளவாடி பகுதியிலும் எல்லையில் இரு மாநில போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

தீர்ப்புக்கு பின்னர் மாநில எல்லையில் அமைதியான சூழ்நிலை நிலவியதால் மாலை 6.30 மணிக்கு பின்னர் படிப்படியாக போக்குவரத்து தொடங்கியது. தமிழக வாகனங்கள் கர்நாடகாவுக்கும், கர்நாடக வாகனங்கள் தமிழகத்திற்கும் ஒவ்வொன்றாக செல்ல தொடங்கின.

மூலக்கதை