நேபாளத்தில் ஊரக விளையாட்டு போட்டி தமிழக மாணவர்கள் சாதனை வெற்றி

தினகரன்  தினகரன்

சென்னை: நேபாளத்தில் நடைபெற்ற  ஊரக தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 18 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட பாரதிதாசன் விளையாட்டு அகடமியின் பயிற்சியாளர் மோகன் பாபு சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா- நோபாளம் இடையிலான 4வது ஊரக விளையாட்டு போட்டி இம்மாதம் 10, 11 தேதிகளில் நடைபெற்றது. நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் நடைப்பெற்ற இந்த போட்டியில்  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஊரக பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள்  பங்கேற்றனர். தடகள போட்டிகளில் 37 பிரிவுகளில் இந்தியா 24 தங்கப்பதங்களை வென்றது. இதில்  18 தங்கப்பதக்கங்களை தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பாரதிதாசன் விளையாட்டு அகடமி மூலம் பயிற்சி பெற்றவர்கள். எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அகடமி அளித்த நிதி உதவி மற்றும் சொந்த பணத்தை செலவிட்டுதான் போட்டியில் பங்கேற்க சென்று வந்தனர். காத்மாண்டு போட்டியில் வென்றதன் மூலம் சிங்கப்பூரில் மே மாதம் நடைபெற உள்ள ஆசிய அளவிலான ஊரக விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில்  பங்கேற்க தமிழக மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.  சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழக அரசு இவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு மோகன் பாபு கூறினார். முன்னதாக காத்மாண்டு விளையாட்டு போட்டியில் பங்கேற்ற பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

மூலக்கதை