கோஹ்லி 35வது சதம்: 5-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா

தினகரன்  தினகரன்

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கேப்டன் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் தனது 35வது சதத்தை விளாசி அசத்தினார்.சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கை சமாளிக்க முடியாமல் திணறிய தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். அந்த அணி 46.5 ஓவரில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸோண்டோ அதிகபட்சமாக 54 ரன் (74 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். பெலுக்வாயோ 34, டி வில்லியர்ஸ் 30, கேப்டன் மார்க்ராம் 24, கிளாசன் 22, மார்கெல் 20, அம்லா 10 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 8.5 ஓவரில் 52 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார். பூம்ரா, சாஹல் தலா 2, குல்தீப், ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான், ரோகித் இருவரும் துரத்தலை தொடங்கினர்.ரோகித் 15 ரன், தவான் 18 ரன் எடுத்து என்ஜிடி வேகத்தில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கோஹ்லி - ரகானே ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. பவுண்டரிகளாக விளாசித் தள்ளிய கோஹ்லி  தனது 35வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து எளிதாக வென்றது. கோஹ்லி 129 ரன் (96 பந்து, 19 பவுண்டரி, 2 சிக்சர்), ரகானே 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோஹ்லி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் (6 போட்டியில் 558 ரன்) விருது பெற்றார். 5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய கோஹ்லி & கோ வரலாற்று சாதனை படைத்ததுடன் ஐசிசி தரவரிசையிலும் நம்பர் 1 அந்தஸ்தை ஏற்கனவே வசப்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நாளை நடக்கிறது.

மூலக்கதை