டி20 சேசிங்கில் ஆஸ்திரேலியா உலக சாதனை

தினகரன்  தினகரன்

ஆக்லாந்து: முத்தரப்பு டி20 போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 244 ரன் இலக்கை வெற்றிகரமாக துரத்திய ஆஸ்திரேலிய அணி, டி20 சேசிங்கில் புதிய உலக சாதனை படைத்தது. ஈடன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் 105 ரன் (54 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்), கோலின் மன்றோ 76 ரன் (33 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 10.3 ஓவரில் 132 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.அடுத்து, கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் வார்னர் 59 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), ஷார்ட் 76 ரன் (44 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அசத்தினர். கிறிஸ் லின் 18, மேக்ஸ்வெல் 31 ரன் (14 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டாய்னிஸ் 4 ரன்னில் ரன் அவுட்டானார். ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 245 ரன் குவித்து உலக சாதனையுடன் வெற்றியை வசப்படுத்தியது.பிஞ்ச் 36 ரன் (14 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கேரி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷார்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியா 4 போட்டியில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று பைனலுக்கு முன்னேறிய நிலையில், நியூசிலாந்து (2) - இங்கிலாந்து (0) அணிகள் நாளை கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஆஸ்திரேலியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும்.* வெஸ்ட் இண்டீஸ் அணி 2015ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் சேஸ் செய்தபோது 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்து வென்றதே டி20ல் அதிகபட்சமாக இருந்தது. இதை ஆஸ்திரேலியா நேற்று முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது. * டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் நியூசி. தொடக்க வீரர் மார்டின் கப்தில் 2188 ரன்னுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். நியூசி. முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லமை (70 இன்னிங்சில் 2140 ரன்) அவர் நேற்று பின்னுக்குத் தள்ளினார்.

மூலக்கதை