ஒரு போட்டியில் வென்றால் மூத்த வயதில் நம்பர் 1

தினகரன்  தினகரன்

சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற மகத்தான சாதனையாளர். இவர் கடந்த 2012 நவம்பர் 4ம் தேதி நம்பர் 1 அந்தஸ்தை இழந்து பின்தங்கினார். அதன் பிறகு காயம் காரணமாக சற்று தடுமாறி வந்தாலும் நடால், ஜோகோவிச், மர்ரே போன்ற தன்னை விட இளம் வயது வீரர்களுக்கு ஈடு கொடுத்து கிராண்ட் ஸ்லாம் வேட்டையை தொடர்ந்து வருகிறார். கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் 6வது முறையாக கோப்பையை முத்தமிட்ட பெடரர் உலக தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார். தற்போது ரோட்டர்டாமில் நடந்து வரும் ஏடிபி தொடரின்  2வது சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபரை 7-6 (10-8), 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ள பெடரர், அரை இறுதியிலும் வெற்றி பெற்றால் நடாலை பின்னுக்குத் தள்ளி மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்துவார். இதன் மூலமாக மிக மூத்த வயதில் (36 வயது), முதலிடத்துக்கு முன்னேறிய வீரர் என்ற உலக சாதனை அவருக்கு சொந்தமாக உள்ளது. முன்னதாக, அமெரிக்காவின் ஆந்த்ரே அகாசி 33 வயதில் நம்பர் 1 ஆக இருந்துள்ளார்.

மூலக்கதை